Pages

Monday 1 August 2016

அகநானூறு Agananuru 139

ஈயல் மூதாய்


கார் காலம் வந்துவிட்டது. அவர் வரவில்லை. அவர் நிலைமை என்னவோ தெரியவில்லையே. தோழியிடம் இவ்வாறு சொல்லிக்கொண்டு தலைவி கலங்குகிறாள்.

1
தூங்குவது போல் இருட்டு. விழிப்பது போல் வானத்தைப் பிளக்கும் மின்னல். மழையைத் தூக்கிக்கொண்டு ஏறும் மேகங்கள் நெஞ்சு நடுங்க ஓயாமல் முழங்கும் இடி. இப்படி மழை பொழிந்த கடைசி நாள்.
2
மழையைக் கொட்டித் தீர்த்துவிட்டதால் மேகங்கள் வெள்ளையாகி மலையில் வைகறை நேரத்தில் உலாவுகின்றன. காலை நேரம் வந்துவிட்டது. வெள்ளை முதுகும், திருகிய கொம்பும் கொண்ட ஆண் இரலை மான் குளிர்ந்த நல்ல நீரைப் பருகிவிட்டுப் புல்லை மேய்ந்த பின்னர் நீண்ட மணலில் பிடவ மரத்து நிழலில் தன் தன் பெண் துணைமானோடு வாழும் வேளை.
3
அரக்கு நிறத்தில் ஈயல் மூதாய்ப் பூச்சிகள் பலவாகத் தோன்றிப் பாய் விரித்திருப்பது போல ஈர மண்ணில் மேய்கின்றன.
4
தோழி! அவர் இன்னும் வரவில்லை. அப்படி என்றால் அவர் திரும்பிவிடுவேன் என்று சொன்னது இடி முழங்கும் இந்தக் கார் காலம் இல்லையா? அவருக்கு என்னவாயிற்று?
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை, பாலை

1
துஞ்சுவது போல இருளி, விண் பக
இமைப்பது போல மின்னி, உறைக்கொண்டு
ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ,
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு,
ஆர் தளி பொழிந்த வார் பெயற் கடை நாள்;   5
2
ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை,
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை,
தண் நறும் படுநீர் மாந்தி, பதவு அருந்து
வெண் புறக்கு உடைய திரிமருப்பு இரலை;    10
வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல்,
காமர் துணையொடு ஏமுற வதிய;
3
அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய்
பரப்பியவை போற் பாஅய், பல உடன்
நீர் வார் மருங்கின் ஈரணி திகழ;  15
4
இன்னும் வாரார் ஆயின் நன்னுதல்!
யாதுகொல் மற்றுஅவர் நிலையே? காதலர்
கருவிக் கார்இடி இரீஇய
பருவம் அன்று, அவர், ''வருதும்'' என்றதுவே.

பிரிவிடை மெலிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
இடைக்காடனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


இரலைமான் தன் துணைவியுடன் 

No comments:

Post a Comment