Pages

Saturday, 23 July 2016

நற்றிணை Natrinai 192

“இரத்தம் குடிக்க ஆவல் கொண்ட சிங்கம் (வயமான்) வலிமை மிக்க ஆண்யானையைக் குறிவைத்துப் பார்க்கும் மரம் அடர்ந்த சோலையில் பூழியர் மக்களின் செந்நிறக் குரும்பை ஆடுகள் (உருவத் துருவை) பகல் வேளையில் வயிறார மேயும். மழைக் காலத்தில் அங்குக் கரடிகள் (எண்கு) மேயும். இப்படிப்பட்ட அச்சம் தரும் மலைச்சாரல் வழியில் என்னை நயந்து ஏன் வருகிறாய்” என்று பலவாறு வெறுப்புற்றுக் (புலந்து) கேட்டுக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் அழகிய மாமை நிறம் கொண்ட அரிவையே! பலாப்பழம் பயன் தரும் கொல்லிமலையின் மேற்குத் திசைப் பாறையில் அணங்கு (பூதம்) உருவம் பொதித்துப் புதிதாக எழுதப்பட்ட பாவை, காலை இளவெயிலில் தோன்றுவது போல உன் அழகு நலம் பொலிவுடன் தோன்றுகிறது. அதனை நினைத்துக்கொண்டு வருதல் என் உள்ளத்துக்கும் உடலுக்கும் ஒரு பாதுகாப்பு (ஏமம்). எனவே வருகிறேன், என்கிறான், தலைவன் தலைவியிடம்.
 
துருவை | செம்மறி ஆடு
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – குறிஞ்சி

குருதி வேட்கை உரு கெழு வய மான்
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்
மரம் பயில் சோலை மலிய, பூழியர்
உருவத் துருவின் நாள் மேயல் ஆரும்
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை
நீ நயந்து வருதல் எவன் எனப் பல புலந்து
அழுதனை உறையும் அம் மா அரிவை
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன நின்
ஆய் நலம் உள்ளி வரின் எமக்கு
ஏமம் ஆகும் மலைமுதல் ஆறே

இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:

Post a Comment