Pages

Friday, 22 July 2016

நற்றிணை Natrinai 190

நெஞ்சே, குறுமகள் புன்னகையில் மகிழ்ந்தாயே, இனி துன்பப்பட்டுக்கொண்டே இரு என்று தலைவன் தனக்குத் தானே சொல்லிக்கொள்கிறான்.

குறுமகள் (சிறுமி) 
  • ஆர்க்காடு ஊர் போல அழகு மிக்கவள். 
  • ஆர்க்காடு – சேந்தன் தந்தை அழிசி அரசன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. நெய்தல் பூக்கள் நெல்லுக்கு இடையே மலரும் வயல்களைக் கொண்டது. 
  • சேந்தன் – பகைவர்களின் கோட்டைகளை வென்றவன். மாரி போல் கொடை நல்கி மகிழ்பவன். பட்டை தீட்டிய (திதலை) வேலைக் கொண்டவன். 
  • அழிசி – சேந்தனின் தந்தை. தேன் மணக்கும் மலர்மாலை அணிந்தவன். தேரில் உலா செல்பவன் (இயல்)
குறுமகள் 
  • மூங்கில் போலக் கண்டார் விரும்பும் (காமர்) தோள் நலம் கொண்டவள். 
  • வலையில் பட்ட மான் போல மருண்டு பார்க்கும் கண்ணில் ஈரம் கொண்டவள். 
  • சிவந்த வாயில் சிரித்துக்கொண்டே சில சொற்கள் மட்டும் பேசி மகிழ்விப்பவள்.

வலையில் மான்
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – குறிஞ்சி

நோ இனி வாழிய நெஞ்சே மேவார்
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த்
திதலை எஃகின் சேந்தன் தந்தை
தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி
வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும்
அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன
காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய
வலை மான் மழைக் கண் குறுமகள்
சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே

பின்னின்ற தலைமகன் ஆற்றானாகி நெஞ்சிற்குச் சொல்லியது
அல்லகுறிப்பட்டு மீள்வான் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்
இடைச் சுரத்துச் சென்று தலைமகள் நலம் உள்ளி மீளலுற்ற நெஞ்சினைக் கழறியதூஉம் ஆம்
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:

Post a Comment