Pages

Tuesday, 19 July 2016

நற்றிணை Natrinai 183

நெய்தலை மிதிக்கும் வெண்குருகு
உமணர் நீண்ட மணல் வழியைத் தாண்டி வருவர். 
மலை வழியில் உப்பு-வண்டி ஒழுக்கையாக வருவர். 
மலைவாழ் மக்கள் தம் நாட்டில் விளைந்த நெல்லைத் தந்து, பிற நாட்டில் விளைந்த உப்பைப் பண்டமாற்றுச் செய்துகொண்டு (சாற்றி, இதற்கு இது என்று சாற்றிக்கொள்ளுதல்) வாழ்வர்.
இவர்களின் சுற்றத்தாருடன் சேர்ந்து சில காலமே உமணர் வாழ்ந்தாலும், அவர்கள் பிரிந்து செல்வது என்பது மலைவாழ்நர்க்குத் துன்பமாகத்தான் இருக்கும். 
அப்படி இருக்கும்போது, 
கொண்க! 
இவளோடு கூடி வாழ்ந்துவிட்டுப் பிரிந்து செல்கிறாய் என்றால் எப்படி இருக்கும்? 
நீ இதனை அறியாது மடமை கொண்டவனாக இருக்கிறாய். 
தனிமையில் இருக்கும் உன் மனைவி மீது அவ்வப்போது ஊதைக் காற்று வீசித் துன்புறுத்தும். 
அப்போது இவள் வாழமுடியாமல் போவாள் என்பதை எண்ணிப் பார்த்தாயா? 

கூட்டமாக மேயும் மீன்களை அருந்தும்போது வெண்குருகுப் பறவையின் மிதியில், நீரில் சும்மாக் கிடக்கும் (வறு) நெய்தல் அழிவது போல இவள் வதங்கி அழிவாள் என்பதை எண்ணிப் பார்க்கவில்லையே. 
தோழி தலைவனை இவ்வாறு தெருட்டுகிறாள். 

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – நெய்தல்

தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து
உமணர் போகலும் இன்னாதாகும்
மடவை மன்ற கொண்க வயின்தோறு
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும்
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே
இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த
வறு நீர் நெய்தல் போல
வாழாள் ஆதல் சூழாதோயே

வரைவிடை வைத்துப் பிரியும் தலைவற்குத் தோழி சொல்லியது
ஆசிரியர் பெயர் தெரியவில்லை

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

No comments:

Post a Comment