Pages

Thursday, 7 July 2016

நற்றிணை Natrinai 147

எவ்வாய்ச் சென்றனை


அழகிய நெற்றியை உடைய சின்ன பெண்ணே! (தலைவி) 
இனி நாம் என்ன ஆவோமோ தெரியவில்லை.

தேன் கூடு கொண்ட மலையில் விளைந்திருந்த தினையின் பெரிய கதிர்களை, சிவந்த வாயினை உடைய கிளிகள் கவர்ந்து செல்லும்படி விட்டுவிட்டு நீ எங்கே சென்றிருந்தாய் என்று அன்னை சினப் பெருக்கத்துடன் அதட்டுகிறாள்.

நான் அவளுக்கு முன்னே நின்றுகொண்டு 
  • அருவி கொட்டும் பெருமலை நாடனை இவளுக்குத் தெரியாது. 
  • அவனைப் பார்த்ததும் இல்லை. 
  • மூங்கிலைப் பிளந்து செய்யப்பட்ட தட்டை வைத்துக்கொண்டு பூப் பறித்துச் சுனையில் பாய்ந்து விளையாடவும் இல்லை. 
என்று தாயிடம் சொன்னேன்.

உனக்கு நினைவில்லையா, 
பொய் புளுகுகிறாயா என்று அன்னை அதட்டினாள்.

என் தோழி தலைவி அப்போது தலையைக் குனிந்துகொண்டு நின்றாள்.

இனி புனத்துக்குச் செல்லக்கூடாது என்று அன்னை கூறிவிட்டாள்.

அய்யோ பாவம் 
இனி என்ன செய்யப்போகிறோம்?

தோழி தலைவியிடம் பேசுபவள் போல, வெளியில் காத்துக்கொண்டிருக்கும் தலைவன் கேட்கும்படி இப்படிச் சொல்கிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – குறிஞ்சி

யாங்கு ஆகுவமோ அணி நுதற் குறுமகள்
தேம் படு சாரற் சிறு தினைப் பெருங் குரல்
செவ் வாய்ப் பைங் கிளி கவர நீ மற்று
எவ் வாய்ச் சென்றனை அவண் எனக் கூறி
அன்னை ஆனாள் கழற முன் நின்று
அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை
அறியலும் அறியேன் காண்டலும் இலனே
வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து
சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவிலை
பொய்யல் அந்தோ வாய்த்தனை அது கேட்டு
தலை இறைஞ்சினளே அன்னை
செலவு ஒழிந்தனையால் அளியை நீ
புனத்தே

சிறைப்புறமாகத் தோழி சொல்லியது
கொள்ளம்பக்கனார் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

சுனை

No comments:

Post a Comment