Pages

Sunday, 3 July 2016

நற்றிணை Natrinai 139

படுமலைப்பண் நின்ற யாழ்


உலகுக்கு ஆணி என்னும்படி குன்றுகள் ஆங்காங்கே, பலரும் தொழும்படி, நிற்கின்றன. 

தழைத்த மேகமே! 
அந்தக் குன்றுகளுக்கெல்லாம் சென்று மழையைப் பொழிகின்றாய். 

யாழின் நரம்பிசையில் படுமலைப் பண் பாடுவது போன்ற இசையுடன் பொழிகின்றாய். 

முழவு முழங்குவது போன்ற ஓசையுடன் பொழிகின்றாய். 

நான் என் மாயோள் கூந்தலில் படுத்து அவளோடு உறவாடிக்கொண்டிருக்கும் இரவில் பொழிகின்றாய். 

மலைச்சாரலில் இருக்கும் என் நல்லூரில் மலர்களெல்லாம் உதிரும்படி பொழிகின்றாய். 
பொழிந்தது எங்களுக்கு உதவுகின்றாய். 
நீ வாழ்க.

பணி முடிந்து வீட்டுக்குத் திரும்பிய பின்னர் பொழிந்த மழையைத் தலைவன் இவ்வாறு வாழ்த்துகிறான்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
பாடல் – முல்லை

உலகிற்கு ஆணியாகப் பலர் தொழ
பல வயின் நிலைஇய குன்றின் கோடுதோறு
ஏயினை உரைஇயரோ பெருங் கலி எழிலி
படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு
எழீஇயன்ன உறையினை முழவின்
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும்
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு
புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர்
விரவு மலர் உதிர வீசி
இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே

தலைவன் வினைமுற்றி வந்து பள்ளி இடத்தானாக பெய்த மழையை வாழ்த்தியது
பெருங்கௌசிகனார் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

மலைச்சாரலில் ஊர்

No comments:

Post a Comment