காதல்
படுத்திய பாடு | ஆராயும் முத்தமிழ் ஓர் ஆறு. அந்த ஆற்றூரில் இருப்பவள் சோமி. அவளது
அழகைக் கண்டு நாராயணன் நீண்ட காதல் மயக்கத்தவன் ஆனான். மற்றைய நான்முகனாகிய
பிரம்மாவும் அவளை அடையும்பொருட்டு மடலூரும் மரபினைப் பின்பற்றினான். விண்ணாக
இருக்கும் மன்மதனும் தன் உருவத்தை இழந்தான். வானவர் தலைவனான இந்திரன் ஆயிரம் கண்
படைத்தவன் ஆனான். (சோமி = அழகி)
பாடல்
ஆராயு முத்தமி ழாற்றூரிற் சோமி யழகுகண்டு
நாரா யணனெடு மாலாகி னான்மற்றை நான்முகனும்
ஓரா யிரமட லூர்ந்தான் விண்மார னுருவழிந்தான்
பேரான வானவர் கோனுங்கண் ணாயிரம் பெற்றனனே .(154)
ஆராயும் முத்தமிழ் ஆற்றூரில் சோமி அழகு கண்டு நாராயணன் நெடு மாலாகினான் மற்றை நான்முகனும் ஓராயிரம் மடலூர்ந்தான் விண் மாரன் உரு அழிந்தான் பேரான வானவர் கோனும் கண் ஆயிரம் பெற்றனனே .(154)
இது கட்டளைக்
கலித்துறையால் ஆன பாடல்.
’நேர்’ அசையில்
தொடங்கும் பாடல் ஒவ்வொரு அடியிலும்
ஒற்றும்
குற்றியலுகரமும் நீங்கலாக 16 எழுத்துக்களயும்,
’நிரை’ அசையில்
தொடங்கும் பாடல் அவ்வாறே 17 எழுத்துக்களையும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு அடியும் 5 சீர்
கொண்டதாக இருக்கும்.
இடைப்பட்ட 4 தொடைகள்
‘வெண்டளை’ யாப்பில் அமையும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’
வாய்பாடு கொண்டதாக இருக்கும்.
இந்தப் பாடலில் இந்த
இலக்கண அமைதிகளைக் கண்டுகொள்ளலாம்.
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து
அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.
No comments:
Post a Comment