தலைவன் தன்னிடம் இல்லாதபோது நிலா தீயைப் போல்
புறப்பட்டு வந்து காய்கிறதே என்று சொல்லித் தலைவி வருந்துகிறாள்.
சிவபெருமான் பெரிய தாரையாகக் கொட்டும் கங்கையின்
கணவன். படமெடுத்துக்கொண்டு ஓங்கும் பாம்பு, ஏழு கடல், பகைவர், தீ, ஆகியவற்றை
முன்பு அழித்தவன். முருகனைத் தரும் தந்தையாகிய நாயகன். சுந்தரமூர்த்தி நாயனாரின்
தூதன். போரில் அன்று பகைவர் மூவரின் முப்புரத்தில் தீயை இட்டவன். அவன் இட்ட தீ போல
மதியம் புறப்பட்டு என்னைக் காய்கிறதே!
பாடல்
இருந்தாரை கேள்வனையோங் குமராவை யெழுபுனலைத்
திருந்தாரை வன்னியைமுன் மடித்தோன்செய்ய வேளைப்பண்டு
தருந்தாதை நாயகன் சுந்தரன்தூதன் சமரிலன்று
பொருந்தார்புரத் திட்டதீப்போன் மதியம் புறப்பட்டதே .(153)
இருந்தாரை கேள்வனை ஓங்கும் அராவை எழு புனலைத் திருந்தாரை வன்னியை முன் மடித்தோன் செய்ய வேளைப் பண்டு தரும் தாதை நாயகன் சுந்தரன் தூதன் சமரில் அன்று பொருந்தார் புரத்து இட்ட தீப்போல் மதியம் புறப்பட்டதே .(153)
இது கட்டளைக்
கலித்துறையால் ஆன பாடல்.
’நேர்’ அசையில்
தொடங்கும் பாடல் ஒவ்வொரு அடியிலும்
ஒற்றும்
குற்றியலுகரமும் நீங்கலாக 16 எழுத்துக்களயும்,
’நிரை’ அசையில்
தொடங்கும் பாடல் அவ்வாறே 17 எழுத்துக்களையும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு அடியும் 5 சீர்
கொண்டதாக இருக்கும்.
இடைப்பட்ட 4 தொடைகள்
‘வெண்டளை’ யாப்பில் அமையும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’
வாய்பாடு கொண்டதாக இருக்கும்.
இந்தப் பாடலில் இந்த
இலக்கண அமைதிகளைக் கண்டுகொள்ளலாம்.
14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து
அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர்
சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.
No comments:
Post a Comment