Pages

Friday 8 July 2016

வாணியன் | காளமேகப்புலவர் KalamekapPulavar 144

வேணியன் | சிவன்
சாதிப் பெயர்களின் அடுக்கால் சிவபெருமான் ஊர்வலம் வரும் காட்சி போற்றப்படுகிறது.
வாணியன் பாடினான்.  வண்ணான் சுமந்து சென்றான். வடுகன் செட்டி சேணியன் ஆகியோர் போற்றினர். கடலிலே பள்ளி கொண்டிருக்கும் திருமால் முன்னே தொழுதுகொண்டு சென்றான். யாரை? இனிய கரும்பாகிய சிவனை. கோணத்தெய்வங்கள் வாழ்த்தின. கருமான் துகில்-கொடி பிடித்துக் கொண்டு சென்றான். சடாமுடி தரித்த சிவபெருமான் அவர்களின் சொல்லைத் தட்டாமல் உலாப்  புறப்பட்ட வேடிக்கை இதுதான்.
எல்லாச் சாதியினரும் சிவனை வழிபட்டனர்.

பாடல்

வாணியன்பாடிட வண்ணான்சுமக்க வடுகன்செட்டி
சேணியன்போற்றக் கடற்பள்ளி முன்தொழத் தீங்கரும்பைக்
கோணியன்வாழ்த்தக் கருமான் றுகிறனைக் கொண்டணிந்த
வேணியனான வன்றட்டான் புறப்பட்ட வேடிக்கையே .(144)

வாணியன் பாடிட வண்ணான் சுமக்க வடுகன் செட்டி சேணியன் போற்றக் கடல் பள்ளி முன் தொழத் தீங் கரும்பைக்
கோணியன் வாழ்த்தக் கருமான் துகில் தனைக் கொண்டு அணிந்த வேணியன் ஆனவன் தட்டான் புறப்பட்ட வேடிக்கையே.



இது கட்டளைக் கலித்துறையால் ஆன பாடல்.
’நேர்’ அசையில் தொடங்கும் பாடல் ஒவ்வொரு அடியிலும்
ஒற்றும் குற்றியலுகரமும் நீங்கலாக 16 எழுத்துக்களயும்,
’நிரை’ அசையில் தொடங்கும் பாடல் அவ்வாறே 17 எழுத்துக்களையும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு அடியும் 5 சீர் கொண்டதாக இருக்கும்.
இடைப்பட்ட 4 தொடைகள் ‘வெண்டளை’ யாப்பில் அமையும்.
5 ஆம் சீர் ‘விளங்காய்’ வாய்பாடு கொண்டதாக இருக்கும்.
இந்தப் பாடலில் இந்த இலக்கண அமைதிகளைக் கண்டுகொள்ளலாம்.

14 ஆம் நூற்றாண்டில் தஞ்சையிலிருந்து அரசாண்ட விசயநகர மன்னன் திருமலைராயன் அவைக்களப் புலவர் அதிமதுரக் கவிராயர் சொன்னபடியெல்லாம் பாடி வெற்றி கண்டவர் காளமேகப் புலவர்.


No comments:

Post a Comment