Pages

Saturday, 30 July 2016

அகநானூறு Agananuru 137

பங்குனித் திருவிழா
செழியன் பொதியமலை மூங்கில்


அவள் தன் காதலன் பிரிவதற்கு முன், பிரியப் போவதை எண்ணி வாடுவதைப் பார்த்த அவளது தோழி, இவ்வாறு சொல்லித் தேற்றுகிறாள்.
1
வழிப்போக்கர் காட்டாற்றின் சேற்றில் கேணி தோண்டி நீர் உண்பர். அதில் இருக்கும் நீரை ஆண்யானை தன் பெண்யானையை முதலில் உண்ணச் செய்து, பின்னர் தான் பருகிச் செல்லும் வழியில் அவர் இன்னும் போகக்கூட இல்லை.
2
சோழர் வெற்றிக் களிப்பில் முரசினை முழக்கிக்கொண்டு தலைநகர் உறையூரில் கள் உண்பர். அந்த உறையூரில் நீர் பெருக்கெடுத்து ஓடும் காவிரியாற்றின் கரையில் மணல் பரப்பில், சருகுகள் கொட்டிக்கிடக்கும் மரச்சோலையில் பொங்கலிட்டுப் படைக்கும் பங்குனித் திருவிழா நடைபெறும். விழாவுக்கு அடுத்த நாள் பொங்கல் வைத்த ஆடுப்புகள் வெறிச்சோடிக் கிடக்கும். அந்த அடுப்பைப் போல உன் நெற்றி பாழ்பட்டுக் கிடக்கிறது.
3
திண்-தேர்ச் செழியன் துளைக்கப்படாத முத்து விளையும் கடலின் அரசன். அவனது பொதியமலை ஆற்றுப் பிளவில் வளர்ந்திருக்கும் மூங்கில் போல் இருந்த உன் தோள் முந்தைய அழகை இழந்துவிட்டது. உன் நெற்றி பாழ்பட்டு இருப்பதையும், தோள் அழகு இழந்திருப்பதையும் எண்ணி நான் வருந்துகிறேன். தோழி இவ்வாறு தலைவியிடம் சொல்கிறாள்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணைபாலை

1
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட
சிறு பல் கேணிப் பிடி அடி நசைஇ,
களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம்
சென்று சேர்பு ஒல்லார் ஆயினும், நினக்கே
2
வென்று எறி முரசின் விறற் போர்ச் சோழர்   5
இன் கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழிற்
பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்,
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில்    10
தீ இல் அடுப்பின் அரங்கம் போல,
பெரும் பாழ்கொண்டன்று, நுதலே; தோளும்,
3
தோளா முத்தின் தெண் கடற் பொருநன்
திண் தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
நல் எழில் நெடு வேய் புரையும்   15
தொல் கவின் தொலைந்தன; நோகோ யானே.

''தலைமகன் பிரியும்'' எனக் கருதி வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
உறையூர் முதுகூத்தனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்
அக்காலத்தில் உறையூரில் நடைபெற்ற
பங்குனி முயக்கம் - திருவிழாவில்
இப்படித்தான் பொங்கல் வைத்தனர். 

No comments:

Post a Comment