கொன் ஒன்று வினவினர்
நயமாக அவர் ஏமாற்றுகிறார்.
1
வெள்ளெலி குன்றிமணி போன்ற கண்களையும், குறுகுறுத்த மயிர்களையும், சிறிய கால்களையும், துருத்திக்கொண்டிருக்கும் மோவாயையும் கொண்டது. அது செம்மண் நிலத்தைப் பறித்த புழுதியில் நாள்தோறும் பூக்கும் வேங்கைப் பூக்கள் நல்லழகுடன் (நன்கனம்) கொட்டிக் கிடக்கும். கார் காலத்தில் இப்படித் தோன்றும் முல்லைநிலம் அது.
2
வில்லால் அடித்த பஞ்சு போல் தோன்றும் வெண்ணிற மேகங்கள் தவழும் குறும்பாறைகள் நிறைந்த கொல்லைக் காட்டுப் பகுதி அது.
3
அங்கு, மேயும் யானைக் கூட்டம் போல் காயாம் பூக்கள் கொட்டிக் கிடக்கும். எரியும் தீயைப் போல் இலவம் பூக்கள் அதனோடு சேர்ந்து கிடக்கும். பூக்கள் கலங்கிய காட்டாற்று ஊற்று வானம் தரும் தூவல் நீரோடு சேர்ந்து வரும். அதனை உண்ணலாம். வர உன்னால் இயலுமா, என்று சும்மா (கொன்) பேச்சுக்காக அவர் என்னைக் கேட்டார். தோழி!,
4
உண்மை அது அன்று. காடைப் பறவையின் சிறகு முள் போல மொட்டு முதிர்ந்த வெட்சிப் பூக்களும், கொல்லையில் பூக்கும் குருந்தம் பூக்களும் கல்லுப் பாறையில் கொட்டிக் கிடக்கும் மிளைக் காடு (பாலைநிலக் காடு) அது. அங்கே நீர் ஓடாது. நீர் போல் தோன்றும் மரல்-நீர் மேட்டு நிலத்தில் ஓடும். அதனைப் பருகுவதற்காக ஓடும் பெண்மானைப் பின்தொடர்ந்து ஆண்மான் ஓடும். இத்தகைய காட்டுவழியில்தான் அவர் செல்கிறார். தலைவி தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.
பாடல் சொல் பிரிப்புப்
பதிவு
திணை - பாலை
1
''குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப,
கார் தலைமணந்த பைம் புதற் புறவின், 5
2
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்,
3
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ,
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று
10
வான் கொள் தூவல் வளி தர உண்கும்;
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?'' எனக்
கொன் ஒன்று வினவினர் மன்னே தோழி!
4
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம்
15
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத்
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே.
''பிரிவிடை ஆற்றாளாயினாள்'' எனக் கவன்ற தோழிக்குத்,
தலைமகள், ''ஆற்றுவல்'' என்பது பட, சொல்லியது.
உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது
கி.மு. காலத்துப் பாடல்

No comments:
Post a Comment