மழவர் வீளை போன்று ஓசை வரும்படி அம்பு எய்வர்
நெஞ்சே!
இவளைக் காட்டிலும் ஈகை சிறந்ததாகையால் பொருள் தேடிக் கொண்டுவரச் செல்லலாம் என நினைப்பாயாயின்,
உன் செயல் சிறக்கட்டும். நான் வரமாட்டேன். – தலைவன் சொல்கிறான்.
இகணை இலை அருகருகு நெருக்கி வைத்தது போன்ற
கூந்தலை உடையவள் என் கோதை. இவள் இன்பத்தைக் காட்டிலும் ஈகை நமக்குச் சிறந்தது.
- இகணை – வானளாவ உயர்ந்திருக்கும். மரம் பருத்திருக்கும். பசுமையான மெல்லிய இலைகளைக் கொண்டிருக்கும்.
- கூந்தல் = தாழ்ந்து கருகருவென இருண்டிருக்கும். வண்டுகள் மொய்க்கும். சூடியிருக்கும் பூவின் தேனைச் சுரும்பு உண்ணும்.
நடுகல் கோயிலில் வேலும் பலகையும் (கேடயம்)
நடப்பட்டிருக்கும். அதன் வழியே செல்பவர்களுக்கு பகையாளிகள் போரிட வருவது போல இருக்கும்.
- நடுகல் – பாதைப் பக்கத்தில் இருக்கும். மயில் பீலி சூட்டப்பட்டிருக்கும். கல்லுருவ வீரனின் பெயரும், பெருமையும் எழுதப்பட்டிருக்கும். மழவர் பசுவினத்தைக் கவர்ந்து செல்லும்போது நடக்க முடியாமல் நின்று வழியில் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும் கன்றுக்காக மழவர்களுடன் போரிட்டு மாண்டவனுக்காக நடப்பட்ட கல் நடுகல்.
- மழவர் – வாயில் வீளை (விசில்) அடிப்பது போல அம்பு எய்ய வல்லவர்கள். ஆனிரைகளைக் கவர்ந்து செல்லும் பழக்கம் உடையவர்கள்.
இப்படிப்பட்ட பாதை வழியே செல்லலாம் என நினைப்பாயாயின்
உன் செயல் சிறக்கட்டும். நான் வரமாட்டேன்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை
''விசும்பு உற நிவந்த மாத் தாள் இகணைப்
பசுங் கேழ் மெல் இலை அருகு நெறித்தன்ன,
வண்டு படுபு இருளிய, தாழ் இருங் கூந்தல்
சுரும்பு உண விரிந்த பெருந் தண் கோதை
இவளினும் சிறந்தன்று, ஈதல் நமக்கு'' என 5
வீளை அம்பின் விழுத் தொடை மழவர்
நாள் ஆ உய்த்த நாம வெஞ் சுரத்து
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின்
கடைமணி உகுநீர் துடைத்த ஆடவர்
பெயரும் பீடும் எழுதி, அதர்தொறும் 10
பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்
வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும்
வெருவரு தகுந கானம், ''நம்மொடு
வருக'' என்னுதி ஆயின்,
வாரேன்; நெஞ்சம்! வாய்க்க நின் வினையே. 15
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன்
சொல்லியது.
மதுரை மருதன் இளநாகனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்


No comments:
Post a Comment