Pages

Friday, 10 June 2016

திருக்குறள் பாவுரை Tirukkural-Pavurai 118

118 கண் விதுப்பு அழிதல்

விதுப்பு = பார்க்க விரும்பும் படபடப்பு = பரபரப்பு = துடிதுடிப்பு.
இந்தக் கண்துடிப்பால் பயன் விளையாமையால் கண்ணின் நிலையை எண்ணி மனம் அழிதல்.
கண்ணீர் 
மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா
தாழிசை
கண்தானே காட்டிற்று கண்ணுள்ளார் முன்னின்றேல்
தண்ணீரை உப்பாக்கித் தானழுவ தென்கொல்லோ 1171    1
எப்படிப்பட் டவரென்றே எண்ணாமல் பார்த்தெடுத்த
தப்பிதத்தை எண்ணாமல் தானழுவ தென்கொல்லோ 1172 2
பாய்ந்தவரைப் பார்த்துவிட்டுப் பக்கமிலை என்றெண்ணிக்
காய்ந்தழு கின்றதொரு காட்சியிது நகைதருமே 1173 3
கண்ணீரே வறண்டுபோய்க் காய்ந்துருத்தி என்னுயிரை
உண்ணும்நோய் தந்ததுவே உருக்குவதன் மாயமென்ன 1174          4
கடலாற்ற முடியாத காமநோய் தந்துவிட்டுப்
படலாற்றாப் பேரலையால் படபடக்கும் பைதலிலே 1175  5
ஓவோவோ நன்றுநன்று நோய்செய்த ஒய்யாரம்
தாமாக அதில்பட்டுத் தவிக்கின்ற வீறாப்பே 1176         6
வறண்டின்னும் வறண்டுபோய் வக்கற்றே அழுதிடுக
உறைந்தவருள் வாழாமல் உசுப்பியழும் என்கண்ணே 1177 7
பேணாமல் எனைவிட்டுப் பிரிந்திருக்கும் அன்னவரைக்
காணாமல் கலங்குவதே கண்ணுக்குப் பெருஞ்சிறப்பாம் 1178          8
தனிச்சொல்
என்றெல்லாம்,
சுரிதகம்
தன்கண்ணைத் தான்நொந்து தானே அழுகின்றாள்
பின்னும் சிலசொல்லிப் பேதுற் றுளைகின்றாள்
வாராக்கால் துஞ்சா மடநெஞ்சே வந்தபினும்
சோராமல் துஞ்சாமல் தொல்லை தருவதென்ன 1179
என்துன்பம் யான்மறைப்ப என்கண் பறையறைந்து
தன்துன்பம் ஊர்க்குரைக்கும் தான். 1180


இது திருக்குறள் பாவுரை
அடியேன் பொதுவன் அடிகள் இயற்றியது 2006

திருக்குறள் மூலம்
பரிமேலழகர் குறள் வைப்பு முறை
சொல் பிரிப்புப் பதிவு
இரண்டு அடிகள் ஒரே வரியில்

118 கண் விதுப்பு அழிதல்

1171. கண்தாம் கலுழ்வது எவன்கொலோ தண்டா நோய், \ தாம் காட்ட, யாம் கண்டது!.
1172. தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா, \ பைதல் உழப்பது எவன்?  
1173. கதுமெனத் தாம் நோக்கித் தாமே கலுழும் \ இது நகத்தக்கது உடைத்து.   
1174. பெயல் ஆற்றா நீர் உலந்த, உண்கண்-உயல் ஆற்றா \ உய்வு இல் நோய் என்கண் நிறுத்து.
1175. படல் ஆற்றா, பைதல் உழக்கும்-கடல் ஆற்றாக் \ காம நோய் செய்த என் கண்.  
1176. ஓஒ, இனிதே!-எமக்கு இந் நோய் செய்த கண் \ தாஅம் இதற்பட்டது.
1177. உழந்து உழந்து உள்நீர் அறுக-விழைந்து இழைந்து \ வேண்டி அவர்க் கண்ட கண்!.
1178. பேணாது பெட்டார் உளர்மன்னோ-மற்று அவர்க் \ காணாது அமைவு இல கண்.
1179. வாராக்கால், துஞ்சா; வரின், துஞ்சா; ஆயிடை \ ஆர் அஞர் உற்றன கண்.
1180. மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம்போல் \ அறை பறை கண்ணார் அகத்து.


திருக்குறள் விளக்கம்
திருக்குறள் ஆங்கிலத்தில்

No comments:

Post a Comment