Pages

Thursday, 9 June 2016

அகநானூறு Agananuru 119

வரைவு நன்று என்று எண்ணாது அகலினும்


வருந்துவாளே என்று எண்ணிக்கொண்டு என்னைப் பார்த்தவர் மணந்துகொள்ளாமலேயே விட்டுவிட்டுச் செல்கிறாரே என்று தோழியிடம் சொல்லித் தலைவி வருந்துகிறாள்.

1
’நெற்றி, தோள், திதலைப் கோடுகள் கொண்ட அல்குல், மேனி வண்ணம், வனப்பு, உடல்கட்டு அனைத்தும் வாட இவள் வருந்துவாள்’ என்று எண்ணிக்கொண்டு திருந்தியவர் போல அவர் என்னைப் பார்த்தார். ஆனால், ‘திருமணம் செய்துகொள்வது நன்று’ என்று நினைக்கவில்லை. அப்படி நினைக்காமலேயே பொருள் தேடப் பிரிந்து சென்றுவிட்டார். என்றாலும் அவர் செல்லும் வழியை எண்ணும்போது என் நெஞ்சு வலிக்கிறது.
2
வழிப்போக்கர்கள் அறுத்துப் போட்ட பிரண்டை, இடி தாக்கிக் கிடக்கும் பாம்புத் துண்டம் போலக் கிடந்து அச்சுறுத்தும் வழியில் செல்கிறார். உப்பு விற்கச் செல்லும் உமணர் சாத்து சமைத்த அடுப்பில் அங்கு வாழும் மழவர் வில்லில் வேட்டையாடிக் கொண்டுவந்த புலால் உணவைச் சுட்டுத் தின்பார்கள். அவர்களும் அங்கு இல்லாமல் ஆள் நடமாட்டம் இல்லாமல் போன வழியில் செல்கிறார்.
3
நெய்தல் பூவின் இதழ் போல அகன்ற இலைப்பகுதியைக் கொண்டிருக்கும் வயிரம் (காழ்) பாய்ந்த வேல், மயில் பீலியோடு இருக்கும் கடிகை, சோறு வைத்திருக்கும் சுரக்குடுக்கை ஓடு ஆகியவற்றோடு வெயில் தணிந்த விருப்பம் மிக்க அழுவத்தில் (சோலையில்) தனக்குத் தானே துணை என்று செல்கிறார் போலும்.
4
அங்கே, புலி தாக்கிப் புண் பட்ட தலை வலிக்க வலிக்க யானை நீர் உண்ணச் செல்லும். நீர் இல்லாத சுனையில் இருக்கும் நிலச் சேற்றில் முழங்கால் வரையில் காலை ஊன்றும். இப்படிப்பட்ட மலையுச்சி மலையாற்றின் வழியே செல்கிறார். – இந்த நினைவு என்னை வருத்துகிறது.  
 
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை

1
''நுதலும் தோளும், திதலை அல்குலும்,
வண்ணமும், வனப்பும், வரியும், வாட
வருந்துவள், இவள்'' எனத் திருந்துபு நோக்கி,
''வரைவு நன்று'' என்னாது அகலினும், அவர் வறிது,
2
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை,  5
ஏறு பெறு பாம்பின் பைந் துணி கடுப்ப,
நெறி அயல் திரங்கும் அத்தம், வெறி கொள,
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில்
நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும்
சுரன் வழக்கு அற்றது என்னாது, உரம் சிறந்து, 10
3
நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலை,
தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை,
மடை அமை திண் சுரை, மாக் காழ் வேலொடு
தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்ப,
துணிகுவர் கொல்லோ தாமே துணிகொள     15
4
மறப் புலி உழந்த வசி படு சென்னி
உறுநோய் வருத்தமொடு உணீஇய மண்டி,
படி முழம் ஊன்றிய நெடு நல் யானை
கை தோய்த்து உயிர்க்கும் வறுஞ் சுனை,
மை தோய் சிமைய, மலைமுதல் ஆறே?          20

செலவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொற்றது;
தோழி தலைமகட்குச் சொற்றதூஉம் ஆம்.
குடவாயிற் கீரத்தனார்

கி.மு. காலத்துப் பாடல்

நெய்தல் | நெய்தல் இதழ் போல் வேல்-இலை


பிரண்டை

வேல் | நெய்தல் இதழ் போல் வேல் 

No comments:

Post a Comment