Pages

Wednesday, 8 June 2016

அகநானூறு Agananuru 117

சிலம்பு நக இயலி


காட்டு வழியில் அவன் அவளுக்குப் பூச் சூட்டிப் பின்னிவிட்ட கூந்தல் அவள் பிடரியில் தொங்குமோ என்னவோசெவிலித்தாய் நினைத்துக் கலங்குகிறாள்,

1
வீட்டு வெளியில் என் மகள் மௌவல், நொச்சி ஆகிய பூக்கள் பூத்துக்கிடப்பதைப் பற்றி நினைக்கவில்லை. அவற்றைப் பறித்துத் தழையாடை ஆக்கி அவளது இடையில் சூட்டிவிட்ட விளையாட்டுத் தோழிமாரையும் நினைக்கவில்லை. வேறொரு புதியவன் சொன்ன பொய்யான சொற்களை நம்பி, விளையாடிய அழகிய இல்லம் புலம்பும்படி விட்டுவிட்டுப் போய்விட்டாள்
2
அச்சம் தரும் பிரிவுப்பாதையில் ஓமை மரத்தில் இருந்துகொண்டு வெள்ளைத் தலையை உடைய பருந்து தன் பெட்டையை அழைக்கும் பாழ்நாட்டு வழியாகச் செல்கிறாள்.
3
அவள் செல்லும்போது அவளது கைவளையல்கள் ஒலித்தன. காலின் சிலம்பு ஆடிச் சிரித்தது. (நான்தானே அறியாதவள் போல அனுப்பிவைத்தேன்)
4
நான் அவளது தலைமுடியில் (குரல்) மணச்சாந்து பூசி உலர்த்தி, வணக்கி, வகைவகையாகப் பிரித்து வாரி, மலரும் பூவைச் சூட்டிவிடுவேன். இப்போது தகரம் (மண எண்ணெய்) பூசிக் குளித்திருக்க மாட்டாள். அவளைப் போலவே அவள் விரும்பும் காதலனும் தகரம் பூசிக் குளித்திருக்க மாட்டான். என்றாலும் மணமுள்ள மலர்களைச் சூட்டிவிடுவான். பின்னிவிடுவான். அந்தப் பின்னல் அவளது பிடரியில் தொங்கும் போலும்.
5
நீண்ட அடிமரம் கொண்ட மா மரத்திலிருந்து விழும், நன்கு பழுத்த (வெண்) பழத்தை, வளைந்த கால்களை உடைய ஆமையும், அதன் குட்டிகளும் உண்ணும் பொய்கையும், பொய்யாப் புது வருவாயும் கொண்டது வாணன் வாழும் சிறுகுடி. அந்த ஊருக்கு வடக்கில் இனிய ஊற்றுநீர் ஓடும் கான்யாறு (காட்டாறு). அந்தக் காட்டாற்று மணல்படிவு (அறல்) போன்று நெளிநெளியாய் அவள் கூந்தல் இருக்கும். அதில் பூச்சூட்டி அவன் பின்னிவிட்ட கூந்தல் அவள் பிடரியில் தொங்குமோ என்னவோ?

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணைபாலை
1
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும்,
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள்,
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி,
2
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர,      5
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப்
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்,
3
பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச்
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே
4
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து;       10
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள்,
தன் ஓரன்ன தகை வெங் காதலன்
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட,
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்
5
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம் 15
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே?

மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது.
ஆசிரியர் பெயர் அழிந்துபோயிற்று.

கி.மு. காலத்துப் பாடல்

பள்ளி செல்லும் மகளுக்குத் தாய் தலை வாரல் 

No comments:

Post a Comment