Pages

Tuesday, 7 June 2016

அகநானூறு Agananuru 115

எருமை மன்னன் குடநாடு போன்ற அழகி
வள்ளல் எவ்வி இறந்தபோது பாணர் தாம் ஊதிப் பிழைக்கும் கொம்புகளை எறிந்துவிட்டனர்


பொருள் சேர்க்கும் தலைவனின் முயற்சி நிறைவடையவில்லை. அதனால் அவன் தொலைவிடத்தில் இருக்கிறான். அவன் நோய்நொடி இல்லாமல் வாழ்வானாகுக. இவ்வாறு  தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

1
நாம் வாழும் இந்தப் பழமையான மூதூர் இடைவிடா விழாக் கொண்டாட்டங்களை உடையது. ஒருவர் மேல் பழி ஏதும் இல்லை ஆயினும் அவர் மேல் புறங்கூறும் அம்பல் ஒழுக்கத்தை மக்கள் மேற்கொள்வர். தெருவில் வாழும் பெண்கள் அவரையும் என்னையும் சேர்த்துப் பேசி இகழ்கின்றனர். எருமை மன்னன் ஆளும் குடநாடு போன்ற என் அழகு தொலைந்தாலும் தொலைந்துவிட்டுப் போகட்டும். என் காதலருக்கு மட்டும் எந்தத் துன்பமும் வரக்கூடாது.
  • அம்பல் = ஆண், பெண் இருபாலாரும் மறைமுகமாகப் பேசும் பேச்சு.
  • அரசன் எருமை தன் கையில் பூண் அணிந்திருந்தான். அது நுண்ணிய வேலைப்பாடுகளைக் கொண்டது.
2
எவ்வி வாட்போரில் வல்ல அரசன். அவன் போரில் மாண்டுவிட்டான். அவனைத் தொழும் வகையில் பாணர் தம் தோளில் மாட்டியிருந்த ஊதுகொம்புகளை நிலத்தில் கிடத்தினர். அந்தக் கொம்புகள் கிடப்பது போல, கொன்றை நெற்றுகள் நிலத்தில் கிடக்கும் காட்டு வழியில் அவர் செல்கிறார்.
3
அங்கே நிலாப்பிறை போன்று வளைந்த கொம்புகளை உடைய யானை மேயும். அதன் மீது தாவிக் கொல்லும் யானையைப் பார்த்து அஞ்சி, தன் யானை இனத்தைக் கூட்டிச் சென்று ஒளித்துக்கொள்ளும். இப்படிப்பட்ட அச்சம் தரும் வழியில் அவர் செல்கிறார். என் நல்லழகைத் தொலைய விட்டுவிட்டுச் செல்கிறார். தொலைநாட்டில் நம்மை இங்கே விட்டுவிட்டு வாழ்கிறார். பொருளீட்டும் அவர் முயற்சி இன்னும் நிறைவேறாததால் வாழ்கிறார். அவர் நோய்நொடி இல்லாமல் வாழ்வாராகுக. 

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை
1
அழியா விழவின், அஞ்சுவரு மூதூர்ப்
பழி இலர் ஆயினும், பலர் புறங்கூறும்
அம்பல் ஒழுக்கமும் ஆகியர்; வெஞ் சொல்
சேரிஅம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக;
நுண் பூண் எருமை குட நாட்டன்ன என் 5
ஆய்நலம் தொலையினும் தொலைக; என்றும்
நோய் இலராக, நம் காதலர் வாய் வாள்
2
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர்
கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய
வள் உயிர் வணர் மருப்பு அன்ன, ஒள் இணர்ச்  10
சுடர்ப் பூங் கொன்றை ஊழுறு விளைநெற்று
அறைமிசைத் தாஅம் அத்த நீளிடை,
3
பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானை,
சினம் மிகு முன்பின், வாம் மான், அஞ்சி
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை, 15
நன்னர் ஆய்கவின் தொலைய, சேய் நாட்டு,
நம் நீத்து உறையும் பொருட்பிணிக்
கூடாமையின், நீடியோரே.

பிரிவிடை வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
மாமூலனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

கொம்பு
கொன்றை நெற்றைப் போன்ற கொம்பு


கொன்றை நெற்று

No comments:

Post a Comment