குதிரை நூல்
போர்வினை
முடிந்து மீளும் தலைவன் தன் தேரோட்டியிடம் சொல்கிறான்.
1
எல்ல, (எலே, டேய், என்று இக்காலத்தில் விளிப்பர்) நான் சொல்வதைக் கேள். இல்லத்தில் வெறியாட்டு விழா நடந்த பந்தல் மேடையில் பூக்கள் உதிர்ந்து கிடக்கும். அது போல ஈரமுள்ள முல்லை நிலத்தில் (புறவு) பூக்கள் (வீ) மலர்ந்து கிடக்கின்றன. பாம்பு விழுங்கும் நிலாவைப் போல ஞாயிறு ஒளி மங்கி மலையில் மறையும்.
2
இந்தச் சிறிய மாலைப் பொழுதிலும் அவர் என்னோடு இல்லையே என்று என்னைக் காய்ந்துகொண்டிருப்பாள். அவளுடைய துன்பம் தீரவேண்டும்.
3
தேரோட்டும் கலை நூலை நன்கு பயின்றவன் நீ. விரைந்து தேரை ஓட்டுக. அங்கே பார். கொடிகள் ஆடும் கோட்டை மதில் தெரிகிறது. யாமக் காவலாளிகள் ஏற்றிவைத்த விளக்கு வானத்து விண்மீன்கள் போலத் தோன்றுகின்றன. அது அரிய காவல் மிக்க அரண்மனை. பிறர் நுழைய அச்சம் தரும் பழமையான ஊர் அது.
4
அந்த ஊரின் திருநகரில் (அரண்மனை அந்தப்புரம்) அரிவைப் பருவத்து என் காதலி இருக்கிறாள். அவள் மாசு இல்லாத கற்பினை உடையவள். நெஞ்சை அரிக்கும் மதமதப்பு கொண்ட கண்ணினை உடையவள். மூங்கில் போன்ற தோளை உடையவள். அணங்கு (அழகால் வருத்தும் பெண்) போன்றவள். என்றாலும் பிறரை வருத்தாத சால்பு உடையவள். அவளைக் காணவேண்டும். கடிவாளம் (பொலம்படை) போட்டு, குதிரையைத் தேரில் பூட்டுக.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – முல்லை
1
''கேளாய்,
எல்ல! தோழி! வேலன்
வெறி அயர்
களத்துச் சிறு பல தாஅய
விரவு
வீ உறைத்த ஈர் நறும் புறவின்,
உரவுக்
கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு,
அரவு நுங்கு
மதியின், ஐயென மறையும் 5
2
சிறு புன்
மாலையும் உள்ளார் அவர்'' என,
நப் புலந்து
உறையும் எவ்வம் நீங்க,
3
நூல் அறி
வலவ! கடவுமதி, உவக்காண்
நெடுங்
கொடி நுடங்கும் வான் தோய் புரிசை,
யாமம்
கொள்பவர் நாட்டிய நளி சுடர் 10
வானக மீனின்
விளங்கித் தோன்றும்,
அருங்
கடிக் காப்பின், அஞ்சு வரு, மூதூர்த்
4
திருநகர்
அடங்கிய மாசு இல் கற்பின்,
அரி மதர்
மழைக் கண், அமை புரை பணைத் தோள்,
அணங்கு
சால், அரிவையைக் காண்குவம் 15
பொலம்படைக்
கலி மாப் பூண்ட தேரே.
வினை முற்றி
மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது.
ஆசிரியர்
பெயர் அழிந்துபோயிற்று
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment