இவள் புது நாண் ஒடுக்கம் நான் காணவேண்டும்
தலைவியைத்
திருமணம் செய்துகொண்டு அவளிடம் இன்பம் துய்க்குமாறு தோழி தலைவனை வற்புறுத்துகிறாள்.
1
குறுநடை போடும் கூனல் கரடிக் கூட்டம் கறையான் கட்டிய புற்றின் கூடாரம் உடையும்படி இரை (உணவு) பெறும் ஆவலில் மண்ணைப் பறிக்கும் நள்ளிரவு வேளையில்,
2
புதிதாகக் குட்டி போட்டிருக்கும் பெண்புலி பசியோடு இருக்கிறது என்பதற்காக ஆண்புலி ஒளி வீசும் தந்தம் கொண்ட யானையைக் கொன்றபின் தன் பெண்புலியை அழைப்பதற்காக முழங்கும் வழியில்,
3
தனியே வருகிறோம் (எமியம்) என்று எண்ணாமல் இங்கு வந்திருக்கிறாய். நடுங்கும் சோலை (பன்னியிருஞ்சோலை) வழியில் இங்கு வந்திருக்கிறாய். இப்படி வரும் தீங்கினை நீ செய்திருக்கிறாய்.
4
என் தோழியின் தோளைத் தழுவுவதில் உனக்கு ஆர்வம். ஒருநாள் நீ இல்லை என்றாலும் என் தோழி உயிர் வாழமாட்டாள்.
5
எவ்வளவுதான் காதல் கொண்டவராக இருந்தாலும் சான்றோர் பழியோடு வரும் இன்பத்தை விரும்புவதில்லை. நீயோ வானளாவும் புகழ் கொண்டவன். இவள் இன்பத்தை இவளை மணந்துகொண்டு பெற்றால் என்ன?
6
கலைமான்கள் விளையாடும் மிளகு வளர்ந்திருக்கும் சோலையில் நீ இவளோடு சேர்ந்திருந்தது யாருக்குத் தெரியும்.
7
எனவே, தொன்றுதொட்டு கடைப்பிடிக்கும் மரபு வழியில் இவளைத் திருமணம் செய்துகொள். பெண் கேட்டு இவள் இல்லத்துக்கு வருக. ஏதோ புதியவர் பெண் கேட்டு வந்திருப்பது போல, இவள் நாணி ஒருங்கி நிற்பதை நான் காணவேண்டும்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – குறிஞ்சி
1
கூனல்
எண்கின் குறு நடைத் தொழுதி
சிதலை
செய்த செந் நிலைப் புற்றின்
மண் புனை
நெடுங் கோடு உடைய வாங்கி,
இரை நசைஇப்
பரிக்கும் அரைநாட் கங்குல்
2
ஈன்று
அணி வயவுப் பிணப் பசித்தென, மறப் புலி 5
ஒளிறு
ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும்
3
பனி இருஞ்
சோலை, ''எமியம்'' என்னாய்,
தீங்கு
செய்தனையே, ஈங்கு வந்தோயே;
4
நாள் இடைப்படின்,
என் தோழி வாழாள்;
தோளிடை
முயக்கம் நீயும் வெய்யை; 10
5
கழியக்
காதலர் ஆயினும், சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்;
வரையின்
எவனோ? வான் தோய் வெற்ப!
6
கணக் கலை
இகுக்கும் கறி இவர் சிலம்பின்
மணப்பு
அருங் காமம் புணர்ந்தமை அறியார், 15
7
தொன்று
இயல் மரபின் மன்றல் அயர,
பெண் கோள்
ஒழுக்கம் கண் கொள நோக்கி,
நொதுமல்
விருந்தினம் போல, இவள்
புது நாண்
ஒடுக்கமும் காண்குவம், யாமே.
இரவுக்குறி
வந்த தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி, வரைவு கடாயது.
நெய்தற்சாய்த்துய்த்த
ஆவூர் கிழார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment