Pages

Wednesday 4 May 2016

திவ்வியப் பிரபந்தம் திருவாய்மொழி பத்து TiruVaiMoli Ten 1-2

வீடு பெறுக எனல்

திவ்வியப் பிரபந்தம் திருவாய்மொழி முதல் திருமொழி
பத்து 2
வஞ்சி விருத்தம்


வீடுமின் முற்றவும்*
வீடுசெய்து* உம்முயிர்
வீடுடை யானிடை*
வீடு செய்மினே 1

முழுமையாக விடுதலை செய்துகொள்ளுங்கள். விடுதலை செய்துகொண்ட பின்னர் வீடு-உடையவனிடம் உம் உயிர் வீடு பெற்று இருக்கும்படிச் செய்யுங்கள்.  

மின்னின் நிலையில *
மன்னுயிர் ஆக்கைக் *
என்னும் இடத்து *
இறை உன்னுமின் நீரே 2

உயிரும் உடம்பும் மின்னலைப் போல நிலை இல்லாதவை. அப்படி இருக்கும்போது சற்றே நினைத்துப் பாருங்கள்.

நீர் நுமது என்றிவை *
வேர்முதல் மாய்த்து * இறை
சேர்மின் உயிர்க்கும் * அதன்
நேர் நிறை இலவே 3

நீர், நுமது என்னும் வேரை அடியோடு கொன்றுவிடுங்கள். உயிராக இருக்கும் இறைவனை அடையுங்கள். அதற்கு நிகரான நிறைவு வேறு இல்லை.

இல்லதும் உள்ளதும் *
அல்லது அவனுக்கு *
எல்லையில் அத்தலம் *
புல்கு பற்றற்றே 4

அவன் இல்லதும் உள்ளதுமான எல்லை இல்லாத தலத்தில் இருக்கிறான். உலகின்பப் பற்றை விட்டுவிட்டு அவனைத் தழுவிக்கொள்ளுங்கள்.

அற்றது பற்றெனின் *
உற்றது வீடு உயிர் *
செற்றது மன்றுறில் *
அற்றிறை பற்றே 5

உலகின்பப் பற்று அற்றுவிட்டால் உயிருக்கு ‘வீடு’ தானே வந்துவிடும். உலக மன்றினை நீ சினந்து செத்தைத் தூசு ஆக்கிவிடுதலே இறைப்பற்று.

பற்றிலன் ஈசனும் *
முற்றவும் நின்றனன் *
பற்றிலையாய் * அவன்
முற்றில் அடங்கே 6

உன்னில் ஈசிக் கிடக்கும் ஈசன் பற்று இல்லாதவனாக இருக்கிறான். முழுமையானவனாக நிற்கின்றான். பற்று இல்லாதவனாக அவன் முழுமைக்குள்ளே அடங்கிக்கொள்.

அடங்கெழில் சம்பத்து *
அடங்கக் கண்டு * ஈசன்
அடங்கெழில் அஃதென்று *
அடங்குக உள்ளே 7

அழகும் செல்வமும் அடங்குகின்றன. ஈசன் அழகின் திரட்சியாக இருக்கிறான். அவன்தான் எழில் என்று உணர்ந்துகொண்டு உனக்குள் நீயே அடங்கிக்கொள்.

உள்ளம் உரைசெயல் *
உள்ள இம் மூன்றையும் *
உள்ளிக் கெடுத்து * இறை
உள்ளில் ஒடுங்கே 8

நினைவு, சொல், செயல் என்னும் மூன்றுமாக நீ இருக்கிறாய். இதனை எண்ணிப் பார்த்து, இறைவனுக்குள்ளே உன்னை ஒடுக்கிக்கொள்.

ஒடுங்க அவன்கண் *
ஒடுங்கலும் எல்லாம் *
விடும் பின்னும் ஆக்கை *
விடும்பொழுது எண்ணே 9

அவனிடம் ஒடுங்கிக்கொண்டால், அனைத்தும் உன்னிடம் ஒடுங்கிக்கொள்ளும். பின் உன் உடம்பு உன்னை விட்டுவிடும். அப்படி உன் உடம்பு உன்னை விடும் காலத்தை எண்ணிப்பார்.

எண்பெருக்கம் நலத்து *
ஒண்பொருள் ஈறில *
வண்புகழ் நாரணன் *
திண்கழல் சேரே 10

நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணும் எண்ணத்தின் பெருக்கத்துக்கு எல்லையே இல்லை. கொடையால் புகழ் பெற்றவன் ‘நாரணன்’. அவன் திருவடிகளில் சேர்ந்துவிடு.

சேர்ந்த தடத் * தென் குரு
கூர்ச் சட கோபன் சொல்
சீர்த்தொடை ஆயிரத்து *
ஓர்த்த இப் பத்தே 11

இதில் உள்ள 10 பாடல்களும் அந்தாதியாக வரும்படித் தொடுக்கப்பட்டுள்ளன. நூலில் இடைச்செருகல் நேராமல் இருக்கவும், மனப்பாடம் செய்பவர் நினைவுக்குக் கொண்டுவர எளிதா அமையும் பொருட்டும் இந்த அந்தாதி முறைமை கையாளப்பட்டது.  

அடுத்த பத்தினை அந்தாதித்தொடை செய்யும் பொருட்டுப் பிற்கால அறிஞர் ஒருவர் பாடிச் சேர்த்த பாடல்

இந்தப் பத்து ’கரனே’ என்று முடிகிறது. அடுத்த பத்து ‘வீடு’ என்று தொடங்குகிறது. இரண்டேயும் அந்தாதியாக அமையும்-பொருட்டு இணைத்துவைக்கும் பாடல் இது.

நம்மாழ்வார் என்னும் குருகூர் வாழ் சடகோபன் பாடல்கள். – நாலாயிர திவ்வியப் பிரபந்தம் – திருவாய்மொழி
அடுத்த பத்தினை அந்தாதித்தொடை செய்யும் பொருட்டுப் பிற்கால அறிஞர் ஒருவர் பாடிச் சேர்த்த பாடல்

பண் : முதிர்ந்த குறிஞ்சி - தாளம் : ஏழொத்து

No comments:

Post a Comment