Pages

Wednesday, 25 May 2016

அகநானூறு Agananuru 97

குயில் அகவும் குரல் கேட்போர்


துணையை அழைக்கும் குயிலின் குரல் கேட்கிறதே, என்ன செய்வேன், என்று சொல்லி, தோழியிடம் தலைவி புலம்புகிறாள்.
1
அந்த நிலம் கள்ளிக்காடு. அங்கு வாழும் புள்ளிமான் கூட்டத்தில் ஒரு ஆண்மான். வறட்சியால் உணவு இல்லை. அதன் கொம்புகள் மட்டும் உதிர்ந்து கிடக்கும்படி புலி அதனைக் கொன்று தின்றுவிட்டது. அங்கே கடுமையான முடை (புலால்) நாற்றம் வீசுகிறது. அங்கு வாழும் மக்களில் ஆண்கள், கொல்லும் வில்லைக் கையிலே கொண்டு, திரிவார்கள். இரவு வேளையில் பிற ஊர்களில் புகுந்து ஆனிரைகளைக் கவர்ந்து வருவார்கள். கல் இடுக்குமுனைகளில் (முடுக்கர்) தாம் வைத்துச் சென்ற கறித் துண்டுகளைத் தேடுவார்கள். – இப்படிப்பட்ட கொடுமையான வழி அது.
2
பெரிய தலையை உடைய பிணம் தின்னிக் கழுகுகளும் (பெருந்தலை எருவை), பருந்துகளும் இறை தேடிக்கொண்டு அங்கு வந்து குடியேறியிருக்கும். அவர், என் காதலர், நம்மை விட்டுவிட்டு அந்த வழியில் பிரிந்து சென்றவர் கொடியவர். நான் நாள்தோறும் அவரை எண்ணி வாடுகிறேன்.
3
ஆராய்ந்து அறுத்த பெருமூங்கில் போல் வளைந்திருக்கும் தோள்களை உடையவர்கள் குறிசொல்லும் மகளிர். (அகவுநர்). அவர்களின் அன்பினைப் பெற்ற அரசன் நன்னன் வேண்மான். அவன் காலிலே கழல்தொடி கொண்டவன். நறவு மகிழ் (நறாக் கள்) விருந்து படைக்கும் ஊரைக் (இருக்கை) கொண்டவன். அது வியலூர். வயலைக்கொடி வேலியில் படர்ந்திருக்கும் ஊர், அந்த வியலூர். 
4
(செங்குட்டுவன் வியலூரை அழித்தான்) அப்போது அந்த வியலூர் அழுதது போல, (தலைவி). “தோழி, நீ அழவேண்டாம்” என்கிறாய். நான் அழமாட்டேன். என் கண்ணீரை என்னால் நிறுத்தமுடியுமா?  
5
குரவம்பூ பூத்துக்கிடக்கிறது. பனிக்காலம் (அற்சிரம்) நீங்கிவிட்டது. நல்ல பதமான வேனில் காலம் பிறந்துவிட்டது. ஆற்றில் மணல் அறல் அறலாகப் படிந்துகிடக்கிறது. அந்த ஆற்றுத்துறையின் கரையில் மருத மரம். அதனை அடுத்து தளிர்த்திருக்கும் மராம் என்னும் மரம். வானத்தில் புகை போன்ற பிஞ்சு மேகங்கள் (மஞ்சு) ஊர்ந்து செல்கின்றன. அடர்ந்த தழைக் கொம்புகளில் பூத்திருக்கும் பூக்களைக் கோதித் தின்றுகொண்டு குயில் தன் துணையைக் கூவி அழைக்கும் குரல் கேட்கிறது. அந்தக் குரலைக் கேட்டு என் கண், நீரை விட்டால் நான் என்ன செய்யமுடியும்?

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை
1
''கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை
வறன் உறல் அம் கோடு உதிர, வலம் கடந்து,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
இரவுக் குறும்பு அலற நூறி, நிரை பகுத்து,
இருங் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்    5
கொலை வில் ஆடவர் போல, பலவுடன்
2
பெருந் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும்
அருஞ் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும்,
3
இருங் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த
நுணங்கு கண் சிறு கோல் வணங்குஇறை மகளிரொடு  10
அகவுநர்ப் புரந்த அன்பின், கழல் தொடி,
நறவு மகிழ் இருக்கை, நன்னன் வேண்மான்
வயலை வேலி வியலூர் அன்ன, நின்
4
அலர்முலை ஆகம் புலம்ப, பல நினைந்து,
ஆழல்'' என்றி தோழி! யாழ என்     15
கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து,
5
அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில்
அறல் அவிர் வார் மணல் அகல்யாற்று அடைகரை,
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி,
கலிழ் தளிர் அணிந்த இருஞ் சினை மாஅத்து     20
இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர்,
புகை புரை அம் மஞ்சு ஊர,
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே?

வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
மாமூலனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


குயில்
குயில் கூவும் ஒலி
குரவம்

No comments:

Post a Comment