Pages

Wednesday, 25 May 2016

அகநானூறு Agananuru 96

அஃதை ஓர் அழகி
சோழன் பருவூர்ப் போர்


ஊர, நீ விரம்பிய ஒருத்தியோடு இருந்ததை ஊரெல்லாம் பேசுகிறது. இங்கு எதற்கு வந்தாய் என்று சொல்லி, தோழி தலைவி இருக்கும் வீட்டு வாயிலில் நுழையவிடாமல் தடுக்கிறாள்.
1
ஓடும் ஊற்றுநீர் ஒரே முனையில் தட்டிப் படலில் விழுந்து ஒழுகி ஓடுமாறு கலிங்கு கட்டி, தண்ணீர் விழுமிடத்தில் வாயகன்ற பெரிய பானையைச் சாய்த்து வைத்திருப்பர். ஓடிவரும் நீரின் வழியே வரும் மீன் படலில் விழும்போது நீர் வடிந்துவிடுவதால் நீர் இல்லாமல் துள்ளிக் குதிக்கும். அப்போது அங்கே வைக்கப்பட்டிருக்கும் வாயகன்ற பானைக்குள் விழும். பானையில் கொஞ்சமாக நீர் இருக்கும். அதில் கிடக்கும் மீனை மீனவர் அள்ளிக்கொண்டு செல்வர். இது ஒருவகை மீன் பொறி.

நாண்-கயிறு அறுந்த வில் நிமிர்வது போல இறால்-மீன் துள்ளி, அங்கே சாய்த்து வைக்கப்பட்டுள்ள நறவுக்கள் உண்ட பானையில் (மண்டை) தெறித்து விழும். ஊர் அது.
2
அந்த ஊரில் பழமையான தோப்பு (பழனம்). அங்கே பொய்கை. பொய்கைக் கரைரையை அடைத்துக்கொண்டு பிரம்புக்கொடி படர்திருக்கிறது. பிரம்புக் கொடியில் முள். அரத்தின் வாய் போன்ற முள். அருகே அருவி. அகன்ற ஆம்பல் இலைகள் அங்கே நீரில் மிதக்கின்றன. வாடைக்காற்று அந்த ஆம்பல் இலைகளை அசைக்கின்றன. கொல்லன் உலைக்களத்தில் தோலாலான துருத்தி மேலும் கீழும் அசைந்து ஆடுவது போல ஆம்பல் இலை வாடையில் அசைந்தாடுகிறது. அங்கே காஞ்சி மரத் தோப்பு. இப்படிப்பட்ட ஊர்க்காரன் அந்தத் தலைவன்.
 
(இலை ஆடுவது போல நெஞ்சம் ஆடும்படி நடந்துகொள்பவன் அந்த ஊரன் – உள்ளுறை உவமை)
3
“ஊர, மகளிர் கூட்டத்தில் நீ விரும்பிய ஒரு இளம்பெண்ணைத் தெரிவு செய்துகொண்டு அவளோடு இருக்கிறாய் என்று ஊரே சொல்கிறது”.
4
அஃதை என்பவள் ஓர் அழகிய பெண். மாமை நிறம் தளதளக்கும் மேனி கொண்டவள். காலில் பொன்னாலான சிலம்பு அணிந்தவள். இடுப்பில் நெருக்கமான தொடைகளைப் கொண்டவள். அவளுடைய தந்தை சோழமன்னன்.
5
யானைமீதேறிப் போருக்குச் சென்ற அந்தச் சோழமன்னன் பருவூர் என்னுமிடத்தில் இருபெரு வேந்தர்களை எதிர்த்துப் போரிட்டான். யானைமீது வந்து வாட்போரில் ஈடுபட்ட இருபெரு வேந்தரும் போர்களத்திலேயே மாண்டனர். இருபெரு வேந்தர்களின் யானைகளையும் மக்கள் கவர்ந்துகொண்டனர். அவர்கள் யானைகளைக் கவர்ந்துகொண்ட செயல் நாடெங்கும் பேசப்பட்டது போல, ஊரன் ஒருத்தியோடு உறவு கொண்டு வாழ்ந்தது ஊரெல்லாம் பேசப்படுகிறது.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – மருதம்

1
நறவு உண் மண்டை நுடக்கலின், இறவுக் கலித்து,
பூட்டு அறு வில்லின் கூட்டுமுதல் தெறிக்கும்
2
பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின்
அர வாய் அன்ன அம் முள் நெடுங் கொடி
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி, 5
அசைவரல் வாடை தூக்கலின், ஊதுஉலை
விசை வாங்கு தோலின், வீங்குபு ஞெகிழும்
கழனிஅம் படப்பைக் காஞ்சி ஊர!
3
''ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து
கொண்டனை'' என்ப ''ஓர் குறுமகள்'' அதுவே     10
4
செம்பொற் சிலம்பின், செறிந்த குறங்கின்,
அம் கலுழ் மாமை, அஃதை தந்தை,
5
அண்ணல் யானை அடு போர்ச் சோழர்,
வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை,
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய,            15
ஒளிறு வாள் நல் அமர்க் கடந்த ஞான்றை,
களிறு கவர் கம்பலை போல,
அலர் ஆகின்றது, பலர் வாய்ப் பட்டே.

தோழி வாயில் மறுத்தது.
மருதம் பாடிய இளங்கடுங்கோ பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

நுடங்கு | நுடங்குதல் | சாய்தல் 


பிரம்பு

No comments:

Post a Comment