Pages

Tuesday, 24 May 2016

அகநானூறு Agananuru 95

நிரையப் பெண்டிர்


காதலனுடன் செல்லத் துணிந்த காதலி, தன் தாய் ஒப்புதல் தந்ததைத் தோழியிடம் சொல்லி மகிழ்கின்றாள்.
1
என் முன்முகம் (நுதல்) கொஞ்சம் கொஞ்சமாகப் பச்சைநிறம் கொள்கிறது. மாந்தளிர் போன்ற மேனி நொய்தாகி (ஐது) மெலிகிறது. பலரும் அறியும்படி இவை தோன்றுகின்றன. என் துன்பம் என் உயிரைக் கொண்டுபோய்விடும். நினைத்துப் பார்த்தால், இது தவிர வேறொன்றும் நிகழப்போவதில்லை. தோழி! இதைக் கேள் (வாழி).
2
இரும்பைப் பழங்கள் குலையிலிருந்து கழன்று விழுகின்றன. மழையில் விழும் அத்திக்கட்டி, ஆலங்கட்டி போல் விழுகின்றன. வழியில் செல்வோரை உண்ணும்படி அவை தங்கவைக்கின்றன. கரடிக் கூட்டம் அவற்றை விரும்பி உண்கிறது.
3
காதலனுடன் செல்வோர் இப்படிப்பட்ட காட்டைக் கடந்து துன்புறுவார்களே என்று இந்த ஊர் மக்கள் எண்ணுவதில்லை. காதல் உறவைப் பற்றிப் பழி தூற்றிப் பேசுகின்றனர். இங்குள்ள பெண்களின் பேச்சு நரகம் (நிரையம்) போல இருக்கிறது. “இந்தக் கௌவைப் பேச்சு என் மகளுக்குத் துன்பம் தருவதாக உள்ளது” என்று சொல்லி என் தாய் நான் என் காதலனுடன் செல்வதற்கு ஒப்புதல் தந்திருக்கிறாள். நான் உன்னைப் பிரிந்து செல்கிறேன். 

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை

1
பைபயப் பசந்தன்று நுதலும்; சாஅய்,
ஐது ஆகின்று, என் தளிர் புரை மேனியும்;
பலரும் அறியத் திகழ்தரும், அவலமும்;
உயிர் கொடு கழியின் அல்லதை, நினையின்
எவனோ? வாழி, தோழி! பொரிகால்  5
2
பொகுட்டு அரை இருப்பைக் குவிகுலைக் கழன்ற
ஆலி ஒப்பின் தூம்புடைத் திரள் வீ,
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க,
ஈனல் எண்கின் இருங் கிளை கவரும்
3
சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார்,     10
கௌவை மேவலர்ஆகி, ''இவ் ஊர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரையஅல்ல, என் மகட்கு'' எனப் பரைஇ,
நம் உணர்ந்து ஆறிய கொள்கை
அன்னை முன்னர், யாம் என், இதற் படலே?                 15

போக்கு உடன்பட்ட தலைமகள் தோழிக்குத் சொல்லியது.
ஒரோடோகத்துக் கந்தரத்தனார் பாடல்


கி.மு. காலத்துப் பாடல்

இரும்பை | இலுப்பை | மழைக்கட்டி போல விழும்

No comments:

Post a Comment