தினைப்புனம் காவலுக்கு வருவோம்
இரவில் வரவேண்டாம், நாளை பகலில் வந்தாலும்
இவளைப் பெறலாம் – என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.
1
கண்ணைப் பறிக்கும்படி மின்னி, மலையடுக்கத்தில் பெருமழை பொழியும் நள்ளிரவில் வருகிறாய். புலி யானையைத் தாக்கிக்கொண்டு குழுமி முழங்கும் மலைச்சாரலில் வருகிறாய். ஐய! இந்த நேரத்தில் நீ வரவேண்டாம்.
2
நேராக இறங்கித் தொங்கும் (இறை) மென்மையானதும், மூங்கில் போன்றதுமான தோளை உடைய இவளும் நானும் தினைப்புனம் காக்க நாளை வரத் திட்டமிட்டிருக்கிறோம். குரங்குகளுக்கும் தெரியாத மரமடர்ந்த மலைக்காடு ஒன்று அங்கு உள்ளது. செங்காந்தள் பூக்கள் பூத்துக் கிடக்கும் காடு அது.
3
அங்கே பல அருவிகள் கொட்டிக்கொண்டிருக்கும். அதன் பக்கத்தில், இருண்ட காட்டில், இடியால் தாக்கப்பட்டு மாண்ட பாம்பின் மணி விளக்கு வெளிச்சத்தில், இவளது இருண்ட கூந்தல் மெத்தையில் நீ உறங்கி இவளை எந்த அச்சமும் இல்லாமல் பெறலாம்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – குறிஞ்சி
1
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி,
படு மழை பொழிந்த பானாட் கங்குல்,
குஞ்சரம் நடுங்கத் தாக்கி, கொடு வரிச்
செங் கண் இரும் புலி குழுமும் சாரல்
வாரல் வாழியர், ஐய! நேர் இறை 5
2
நெடு மென் பணைத் தோள் இவளும் யானும்
காவல் கண்ணினம் தினையே; நாளை
மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின்
ஒண் செங் காந்தள் அவிழ்ந்த ஆங்கண்,
3
தண் பல் அருவித் தாழ்நீர் ஒரு சிறை, 10
உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின்
திருமணி விளக்கின் பெறுகுவை
இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே.
இரவுக்குறிச் சென்று தலைமகளைக் கண்ணுற்று
நீங்கும் தலைமகனை, பகற்குறி நேர்ந்த வாய்பாட்டால், தோழி
வரைவு கடாயது.
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment