Pages

Thursday, 19 May 2016

அகநானூறு Agananuru 87

தோளை அணைத்துக்கொண்டு அவள் கூந்தலில் உறங்கலாம்


பொருளுடன் இல்லம் திரும்பும் தலைவன் தன் நெஞ்சோடு பேசுகிறான்.

1

சிற்றூர்க் குரம்பை-வீட்டில் இரவில் தங்கி, கோழி கூவும் விடியலில் புறப்பட்டு, மறவர் தண்ணுமை முழக்கும் பாலைநில வழியே இல்லம் திரும்புகிறான்.

சிற்றூர் – தயிர் கடைந்த மத்து முற்றத்தில் கிடக்கிறது. அதில் ஒட்டிக்கொண்டிருக்கும் தயிரைக் கன்றுக்குட்டி நக்குகிறது. கன்று பந்தலில் கட்டப்பட்டிருக்கிறது. அந்தப் பந்தல் படலாலான தடுப்புகளைக் கொண்டது. அதன் அருகில் குரம்பை. அது புல்லால் வேயப்பட்ட குடிசை. இரவில் இந்தக் குரம்பையில் அவன் தங்குகிறான்.

சேவல் – நெற்றியில் குடுமியைக் கொண்டது. வீட்டு விட்டத்தில் (நெடுமரம்) இருந்துகொண்டு அது விடியற்காலத்தில் முதல் குரலை எழுப்புகிறது.
 
மறவர் – வழியில் வேட்டையாடி உண்ணும் மறவர் ஊர் (குறும்பு) இருக்கும். குறும்பில் உள்ள வீடுகள் கல் அடுக்கிய சுவர்களால் ஆனவை. மறவர் முன் செல்ல, தலைவன் பின்னே செல்வான். மறவர் ஊரில் தண்ணுமை முழங்கும் இனிமையான பண்ணிசை அதிர்வில் நெஞ்சம் துண்-எனத் துடிக்க, (படபடக்க) தலைவன் செல்வான்.

2

நெஞ்சே, தலைவன் சொல்கிறான், நெஞ்சம் துடிக்கும்படி, தண்ணுமைப் பண் கேட்கும் குன்றுகளுக்கு இடையே பிரியும் வழிகளில் நான் செல்ல நீ பெரிதும் வருந்தினாய். இனி வருந்த வேண்டாம். இனி மகிழ்ச்சியாக இரு.
 
3

நம் காதலியின் நீண்ட கூந்தல் மெத்தையில், மூங்கில் போன்று அழகு கொண்ட அவளது தோளை அணைத்து மகிழலாம். சுணங்கு கொண்டு அழகுடன் திகழும் அவளது முலை நலத்தைப் பாராட்டி மகிழலாம். விளக்குச் சுடருடன் விளங்கும் வானளாவிய மாடங்கள் கொண்ட, அவள் இருக்கும் அந்த அகன்ற நகரை விரைவில் அடைந்துவிடுவோம்.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை

1
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்,
கன்று வாய் சுவைப்ப, முன்றில் தூங்கும்
படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை,
நல்கூர் சீறூர் எல்லித் தங்கி,
குடுமி நெற்றி நெடுமரச் சேவல்     5
தலைக் குரல் விடியற் போகி, முனாஅது,
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின்
எழுந்த தண்ணுமை இடங் கட் பாணி,
அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென,
2
குன்று சேர் கவலை, இசைக்கும் அத்தம்,       10
நனி நீடு உழந்தனை மன்னே! அதனால்
உவ இனி வாழிய, நெஞ்சே! மை அற
3
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்ச்
சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி,
தாழ் இருங் கூந்தல் நம் காதலி 15
நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே.

வினை முற்றி மீளும் தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
மதுரைப் பேராலவாயார் பாடல்   

கி.மு. காலத்துப் பாடல்

சேவல்

No comments:

Post a Comment