அவர் வருவார் என்று நாம் தெளிவுடன் இருக்கும் கார்காலம் இது
தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.
1
’நெற்றியில் பசப்பு ஊறுகிறது. பருத்த தோள்
நெகிழ்ந்து தளர்கிறது. உண்ணாப் பட்டினியால் உடல் சாய்ந்து உயிர் பிரிந்துகொண்டிருக்கிறது.
நான் இப்படிக் கிடக்கிறேன். எனக்காக நீயும் இப்படிக் கிடக்கிறாய். இப்படி நாம் இங்குக்
கிடக்கும்படி விட்டுவிட்டு அவர் நம்மைத் துறந்து சென்றுவிட்டார். அவர் அறநெறியாளர்
அல்லர்’ என்று அவருடன் பிணக்கிக்கொண்டு, தோழி, நீ அழவேண்டாம். இப்படிச் சொல்லித் தோழி
தலைவியைத் தேற்றுகிறாள்.
2
அன்று கன்று போட்டதால் பச்சை உடம்புடன் தள்ளாடிக்கொண்டு
மென்மையாக நடக்கும் பெண்யானையின் பசியைப் போக்குவதற்காக, அதன்மீது அன்பு கொண்ட பசுமையான
கண்ணை உடைய ஆண்யானையானது முற்றாத இளமூங்கில் முளைகளைக் கொண்டுவந்து அதற்கு ஊட்டும்
வேங்கட மலைப்பகுதில் அவர் செல்கிறார். வள்ளல் அரசன் வென்வேல் திரையன் அரசாளும் வேங்கத்தில்
செல்கிறார். அங்குள்ள காட்சிகள் நம்மை அவருக்கு நினைவூட்டும்.
3
இளைய வேங்கை மரம் நல்ல காலப் பொழுது வந்ததும்
பூத்துக் கிடக்கும். அப்போது அதன் பூக்ககள் புள்ளி மயிலின் மேல் கொட்டும். அவற்றை உதறித்
தள்ளுவதற்காக மயில் பூத்திருக்கும் குருந்தஞ் செடியின்மேல் ஏறி ஆடும். தன் துணையை அழைக்கும்
குரல் கொடுத்துக்கொண்டே ஆடும் அந்த ஆண்மயில் அகவும். அப்படி மயில் ஆடி அகவும் குளுமையான
கார்காலம் இது. அவர் திரும்பிவிடுவேன் என்று கூறிச்சென்ற கார்கால மழை பொழிவதைப் பார்.
விரைவில் திரும்பிவிடுவார். அழாதே.
வரலாறு
- திரையன் வேங்கடமலைப் பகுதியே ஆண்ட அரசன்.
- இளந்திரையன் காஞ்சிமாநகரில் இருந்துகொண்டு ஆண்ட அரசன்.
- இளந்திரையன் ஒரு வள்ளல் மற்றும் புலவன்
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை
1
''நல் நுதல் பசப்பவும், பெருந் தோள் நெகிழவும்,
உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்,
இன்னம் ஆகவும், இங்கு நத் துறந்தோர்
அறவர்
அல்லர் அவர்'' எனப் பல புலந்து,
ஆழல் வாழி, தோழி! ''சாரல், 5
2
ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி,
கன்று, பசி களைஇய, பைங் கண் யானை
முற்றா மூங்கில் முளை தருபு. ஊட்டும்
வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை,
3
நல் நாள் பூத்த நாகு இள வேங்கை 10
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை
நனைப் பசுங் குருந்தின் நாறு சினை இருந்து,
துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார்,
வருதும், யாம்'' எனத் தேற்றிய
பருவம்காண் அது; பாயின்றால் மழையே. 15
தலைமகன் பிரிய, வேறுபட்ட
தலைமகளைத் தோழி வற்புறுத்தியது.
காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்
பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்


No comments:
Post a Comment