அவள் சிற்றூரில்
நான் பாசறையில்
அவனது பிரிவைப் பொறுத்துக்கொண்டு அவள் இல்லத்தில்
இருக்கிறாள். அவளை நினைத்துக்கொண்டு அவன் போர்ப்பாசறையில் இருக்கிறான். அவன் சொல்கிறான்.
1
அழகு மிக்க வானவில் மலைமேல் வளைந்துகிடக்கிறது.
மேகம் அலைகடலில் புகுந்து நீரை முகந்துகொண்டு போர் முரசம் போல முழங்கி, பெருநீரைத்
தாங்கமுடியாமல் தாழ்ந்து, பெருமிதத்துடன் (வலன் ஏர்பு)
திசையெல்லாம் புதையும்படி மழை பொழிகிறது. அகன்ற நிலப்பரப்பு கண்ணுக்கு இனிமையாக நிறைவுடன்
(ஏமுறுதல்) தோன்றும் கார்காலம் இது.
2
பன்றி நெருப்புப் பொறி போன்ற தன் கண்ணை உருட்டிக்கொண்டு,
நீர்நிலைச் சேற்றில் தூங்குகிறது. அதன் முதுகு மூடும்படி நாள்தோறும் மலரும் முல்லை
மலர்கள் கொட்டுகின்றன. இப்படிப்பட்ட முல்லைநிலத்து முனைப் பகுதியில் ஒரு சிற்றூர்.
என்னுடைய அவள் தன் ஒளி மிக்க முகத்துடன் அந்தச் சிற்றூரில் இருக்கிறாள்.
3
நானோ, வேந்தன் பாசறையில் இருக்கிறேன். பகைவர்
தம் கோட்டை வாயிலைத் திறந்துகொண்டு வந்து கொடுக்கும் திறையை என் அரசன் வாங்க மறுத்து,
அவர்களின்மீது கொண்ட சினம் மாறாதவனாகப் போரிட்டு அவர்களை அழிப்பதிலேயே நாட்டம் கொண்டுள்ளான்.
என்ன செய்வேன்?
கொடி
பறக்கும் கோட்டை. பச்சை இலைகள் படர்ந்து கிடக்கும் கோட்டை. உழைப்பாளிகள் (வினைஞர்) கள்ளுண்டு மகிழும் நெற்களங்கள் பல சூழ்ந்திருக்கும்
கோட்டை. நெருப்பைப் போன்ற மலர்களைப் பிறழும்படிப் புரட்டி விட்டுவிட்டு நெல்லை அறுத்து,
பெரிய பெரிய கட்டுகளாக்கி (சூடு), களத்தில் சேர்க்கும்
இடங்களைக் கொண்ட கோட்டை.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – முல்லை
1
மலைமிசைக் குலைஇய உரு கெழு திருவில்
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி,
தாழ் பெயற் பெரு நீர், வலன் ஏர்பு, வளைஇ,
மாதிரம் புதைப்பப் பொழிதலின், காண்வர
இரு நிலம் கவினிய ஏமுறுகாலை 5
2
நெருப்பின் அன்ன சிறு கட் பன்றி,
அயிர்க்கட் படாஅர்த் துஞ்சு, புறம் புதைய,
நறு வீ முல்லை நாள் மலர் உதிரும்
புறவு அடைந்திருந்த அரு முனை இயவின்
சீறூரோளே, ஒண்ணுதல்! யாமே, 10
3
எரி புரை பல் மலர் பிறழ வாங்கி,
அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெருஞ் சூடு
கள் ஆர் வினைஞர் களம்தொறும் மறுகும்
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
அருந் திறை கொடுப்பவும் கொள்ளான், சினம் சிறந்து, 15
வினைவயின் பெயர்க்கும் தானை,
புனைதார், வேந்தன் பாசறையேமே!
தலைமகன் பாசறையிலிருந்து சொல்லியது.
மதுரை எழுத்தாளன்
கி.மு.
காலத்துப் பாடல்

No comments:
Post a Comment