Pages

Monday, 30 May 2016

அகநானூறு Agananuru 107

கதநாய் வடுகர்


“அவர் பொருளீட்டச் சென்றால், அவருக்குத் துணையாக நானும் செல்வேன்” என்று தலைவி கூறுகிறாள் என்று, தலைவனிடம் தோழி கூறுகிறாள்.

1
பொருளீட்டச் செல்வதாக நீ கூறினாய். அதனைக் கேட்டதும் என் தோழி தன் அன்பு நெஞ்சில் பெருமூச்சு விட்டாள். தன் துன்பத்தைப் போக்கிக்கொள்வதற்காக உன்னுடன் வருவதாகக் கூறுகிறாள்.
2
வழியில், புலி ஆண்மான் வயிற்றுக் கறியைத் தின்னும். அதில் மிஞ்சிப்போய்க் கல்லுப் பாறையில் உலர்ந்து கிடக்கும் கறியை வழியில் போகும் புதியவர்கள் உண்டு மகிழ்வர்.
3
அங்கு, நாயுடன் சென்று வேட்டையாடி வாழும் வடுகர் இன மக்கள் இருப்பார்கள். அவர்கள் மூங்கில் அரிசியுடன் பசுவின் வெண்ணெய் சேர்த்துச் சமைத்த வெண்பொங்கலைத் தேக்கிலையில் வைத்து உண்பார்கள். அவர்களின் வேட்டை முனையைக் கடந்து செல்ல வேண்டும்.
4
வழியில் மண் சரியும் ஏறுபாதை இருக்கும். அதில் ஏறும் வலிமை மிக்க எருது அச்சரிவில் பட்டுக் கால் முடமாகிக் கிடக்கும்.
5
அங்கு, துளையுள்ள இரும்பைப் பழங்கள் உதிர்ந்து கிடக்கும். அவற்றை மரை-மான்கள் மேய வரும். அங்கு விளையாடும் சிறுவர்கள் அந்த மான்களை வில் எய்து துரத்துவிட்டு, அந்த இரும்பைப் பழங்களைப் பொறுக்கிக் கொண்டுவந்து, கால் முடம்பட்டுக் கிடக்கும் அந்த எருதுக்கு ஊட்டுவர். மலையில் இருக்கும் அவர்களது சிற்றூரில் மாலை வந்ததும் தங்கலாம். அந்தச் சிறுவர்கள் துணையாக இருப்பார்கள்.
6
அங்குக் காலடியை உருத்தும் பரலாகக் கிடப்பதெல்லாம் உதிர்ந்து கிடக்கும் பூக்களே. மணப்பதெல்லாம் பூ மணமே. ஈரமான கூந்தலைக் கொண்ட என் தோழி, உன் காதலி அப்படிப் பூ மணக்கும் காட்டில், துணையைத் தேடி, உன்னுடன் வருவதாகக் கூறுகிறாள்.
 
அழைத்துச் செல்ல இயலாது. எனவே பிரிவைத் தவிர்ப்பான், என்று தோழி எதிர்பார்க்கிறாள்.  

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை

1
நீ செலவு அயரக் கேட்டொறும், பல நினைந்து,
அன்பின் நெஞ்சத்து, அயாஅப் பொறை மெலிந்த
என் அகத்து இடும்பை களைமார், நின்னொடு
2
கருங் கல் வியல் அறைக் கிடப்பி, வயிறு தின்று
இரும் புலி துறந்த ஏற்றுமான் உணங்கல்,      5
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்,
3
ஒலிகழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு
ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும்           10
கல்லா நீள் மொழிக் கத நாய் வடுகர்
வல் ஆண் அரு முனை நீந்தி, அல்லாந்து,
4
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு காற் பட்டத்து
இன்னா ஏற்றத்து இழுக்கி, முடம் கூர்ந்து,
ஒரு தனித்து ஒழிந்த உரனுடை நோன் பகடு     15
5
அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல்
புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி,
மரை கடிந்து ஊட்டும் வரைஅகச் சீறூர்
மாலை இன் துணைஆகி, காலைப்
6
பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப,       20
மண மனை கமழும் கானம்
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே.

தோழி தலைமகள் குறிப்பு அறிந்து வந்து, தலைமகற்குச் சொல்லியது.
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்


படம், இக்காலச் சிறுவர்
அக்கால வடுகச் சிறுவர்
இப்படி வில்லை
வைத்துக்கொண்டு
விளையாடும்போது
இரும்பைப் பழத்தை
மேயவரும் மானைத்
துரத்திவிட்டு, அந்த
இரும்பைப் பழங்களைப்
பொறுக்கிக் கொண்டுவந்து
மண் சரிந்து
முடம்பட்டுக் கிடக்கும்
எருதுக்கு ஊட்டுவர்

No comments:

Post a Comment