பூ சூடாமல் இருந்த மனைவிக்கு அவன் பூ சூட்டிவிட்டான்
நீ போருக்குப் போன பின்னர் தலையில் பூ முடிக்காமல்
இருந்த இவள் தலையில் பூ சூட்டினாயே, எந்தையே, இனியது செய்தாய், வாழிய, - என்று சொல்லித்
தோழி தலைவனை வாழ்த்துகிறாள்.
1
வேந்தன் வினை என்பது போர். போர் முடிந்ததும் இளையர் (போர்வீரர்கள்) வெற்றி வேலுடன் திரும்புவர். அவர்கள் இன்புறுமாறு வலவன் தேரைப் பூட்டுவான். தோல் சவுக்கால் (வள்பு) அடித்துக் குதிரைகளை ஓட்டுவான். தார்க்கோலால் குத்தின் (முள் உறின்) குதிரை தரையில் (முந்நீர் மண்டிலம்) தவ்வுநடை (ஆதி) போடாது. தேரில் நான்கு குதிரைகள் பூட்டப்படுவது வழக்கம். குதிரைகள் விரைந்து செல்லும் பாங்கு கொண்டவை (கடுநடை).
2
வெள்ளாட்டுக் குட்டிகள் இலைகளைக் கறித்துக்கொண்டு துள்ளி விளையாடும் ஊர்களைத் தாண்டித் தேர் செல்லும். புதரில் பூத்துக்கிடக்கும் அவரையில் விதை ஏறாத இளங்காய் போன்று தோன்றும் வயிற்றை உடையவை அந்த ஆட்டுக்குட்டிகள். வளைந்து தொங்கும் (மாழ்கி) பெரிய காதுகளை உடையவை. அந்த ஆட்டுக்குட்டிகளோடு சிறுவர்களும் துள்ளி (உகளி) விளையாடுவார்கள். அந்த ஆட்டுக் குட்டிகள் கவையாகப் பிரிந்திருக்கும் அவரை இலைகளை வயிறார உண்ட பின்னர் (மான்று) பிற தளிர்களைக் கறிக்கும்.
3
மாலை வேளையில் இல்லம் புகுந்த எந்தையே! (என் தந்தை போன்றவனே) கண்ணில் பனி பொழிய, தன்னைத் தானே நொந்துகொண்டு (பல புலந்து) இந்த ஆய்தொடி அரிவை கிடந்தாள். அவள் சடையில் (குரல்) மலரும் பூக்களை வேய்ந்தாயே (கூரை வேய்வது போல அடுக்கினாயே) நல்லது செய்தாய். நீ வாழிய!
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – முல்லை
1
வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின்
வென் வேல் இளையர் இன்புற, வலவன்
வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா 5
நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர்,
வாங்குசினை பொலிய ஏறி; புதல
2
பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன
உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி,
மாழ்கி
அன்ன தாழ் பெருஞ் செவிய, 10
புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக்
கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும்
சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை
3
இனிது செய்தனையால் எந்தை! வாழிய!
பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் 15
ஆய் தொடி அரிவை கூந்தற்
போது குரல் அணிய வேய்தந்தோயே!
வினை முற்றி மீளும்
தலைமகற்குத் தோழி சொல்லியது.
மதுரை மருதன் இளநாகனார்
கி.மு.
காலத்துப் பாடல்


No comments:
Post a Comment