Pages

Saturday 28 May 2016

அகநானூறு Agananuru 103

என்னை நயந்தவர் எனக்கு நல்கமாட்டாரா


என் நலனை எடுத்துச் சென்ற அவர் திரும்பி வந்து தன்னுடன் எடுத்துச் சென்ற என் நலனைத் திருப்பித் தரமாட்டாரா, என்று தோழியிடம் தலைவி வினவி வருந்துகிறாள்.

1
நிழல் இல்லாத நிலப்பரப்பு. வல்லூறுப் பறவையின் ஆண் தன் கதிர் மயிர் கொண்ட தலையைச் சாய்த்து இறையைக் குறி பார்க்கும். நுண்ணிய சிவந்த நாக்கினையும், பல பொறிகளையும் உடைய குறும்பூழ் சேவல் பாதுகாப்பான இடத்தைத் தேடும்.  
2
காய்ந்திருந்த முள்ளுப் புதரில் தனிமையாக (புலம்ப – புலம்பே தனிமை – தொல்காப்பியம் உரியியல்) ஓடி ஒளிந்துகொள்ளும். அது பழுதடைந்து கிடந்த (மூரி) ஊர் மன்றம். பசுவினங்களை மேய்க்கும் சிறுகுடி மக்கள் அங்குத் தங்குவர். பின்னர் மாடுகள் மேயும் இடங்களைத் தேடிச் சென்றுவிடுவர்.
3
புதரில் தங்கிய குறும்பூழ், இடையர் தங்கிப் போய்விட்ட உயர்ந்த நிலைக்கால் கொண்ட அகன்ற மனையின் கூரையில் இருக்கும் இறைவானத்துக்குப் (இறை) போய் ஒடிவந்த வருத்தம் போகப் பெருமூச்சு விடும் (அயா உயிர்க்கும்).  
4
இப்படிப்பட்ட கொடிய பாலைநிலக் காட்டு வழியில் அவர் சென்றுள்ளார். அவர் மேற்கொண்ட வினை முடிந்து திரும்பிவிட்டார் என்னும் சொல் வராதா? நள்ளிரவில் என் நலனை வினவிக்கொண்டு வரமாட்டாரா? நான் பசலை நோயைத் தாங்கிக்கொண்டு இருக்கிறேனே. அவரோடு சென்றுவிட்ட என் நலனை அவர் திருப்பித் தரமாட்டாரா? அவர் என்னை நயந்தவராயிற்றே.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை –  பாலை

1
நிழல் அறு நனந்தலை, எழால் ஏறு குறித்த
கதிர்த்த சென்னி, நுணங்கு செந் நாவின்,
விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறி,
காமர் சேவல் ஏமம் சேப்ப;
2
முளி அரில் புலம்பப் போகி, முனாஅது 5
முரம்பு அடைந்திருந்த மூரி மன்றத்து,
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி,
3
உறையுநர் போகிய ஓங்கு நிலை வியல் மனை,
இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும்
4
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி; தம்வயின் 10
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்மன் என,
நள்ளென் யாமத்து உயவுத்துணை ஆக
நம்மொடு பசலை நோன்று, தம்மொடு
தானே சென்ற நலனும்
நல்கார் கொல்லோ, நாம் நயந்திசினோரே?    15

தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொற்றது.
காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்

குறும்பூழ்

No comments:

Post a Comment