Pages

Friday 27 May 2016

அகநானூறு Agananuru 101

புன்கால் முருங்கை


“நன்மை செய்தால் தீமை வராது” என்னும் பழமொழி உண்மையாய் நிகழ்வதை என் வாழ்வில் கண்டுகொண்டேன், என்று தலைவி தன் தோழியிடம் கூறுகிறாள்.

1
''இம்மை நன்று செய் மருங்கில் தீது இல்'' என்பது பழமொழி. இந்தப் பிறவியில் நன்மை செய்தால், நன்மை செய்தவரைச் சார்ந்தவருக்கும் (மருங்கில்) தீமை நிகழாது என்பது பொய்க்காததை இந்தப் பிறவியிலேயே பார்த்தாயா.
2
மழவர் பசுவினங்களைக் கவர்ந்துவரும் காட்டு வழியில் அவர் செல்கிறார். மழவர் தலையில் சிண்டு (பித்தை). அது ஆட்டுக் கொம்பு போல இருக்கிறது. பிடரியில் (சுவல்) தொங்குகிறது. அவர்கள் சினத்தில் சிவந்திருக்கும் கண்ணை உடையவர்கள். அவர்களின் உடம்பெல்லாம் மண். வாய்க்கும் பகையையெல்லாம் துகளாக்கும் திறம் கொண்டவர்கள், அவர்கள். தீ மூட்டும் சிறிய கோல், வில், மத்துக்கட்டை ஆகியவற்றைக் கையில் எடுத்துக்கொண்டு செல்வர். மத்தில் நுரைப்பஞ்சு இருக்கும். அவர்களின் காலிலே செருப்பு (தொடுதோல்). நடக்கும்போது ஒலி எழுப்பும் செருப்பு. இப்படிச் செருப்பொலியுடன் பசுவினத்தின் பக்கம் செல்வர். பசுவினங்களைக் கன்றுடன் கவர்ந்து வருவர். அவர்கள் வாழும் காட்டில் அவர் செல்கிறார்.      
3
வானத்தில் செல்லும் ஓடம் போல ஞாயிறு தன் வெயில்-சினத்தை அவிழ்த்துவிடும் பகல் பொழுது மிகுதியாக இருக்கும் கோடைக் காலத்தில் செல்கிறார். வழியில் வலிமையில்லாத கொம்புகளில் முருங்கைப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. மழைபனிக்கட்டிகள் (ஆலி) கொட்டுவது போல அந்த முருங்கைப் பூக்கள் கொட்டுகின்றன. நம்மை விட்டுவிட்டு மலை வழியில் செல்லும் அவரை நாம் சினந்துகொள்ளவில்லையே.
 
நாம் சினந்துகொள்ளாத பண்புநலம் (நன்மை) பூவாகக் கொட்டி அவருக்கு நன்மை செய்கிறது பார்த்தாயா.

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை – பாலை

1
அம்ம வாழி, தோழி! ''இம்மை
நன்று செய் மருங்கில் தீது இல்'' என்னும்
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்றுகொல்?
அம்மா, தோழி, இதைக் கேள்.
2
தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு, சுரிந்த
சுவல் மாய் பித்தை, செங் கண், மழவர்    5
வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடுந் திறல்
தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி,
நுரை தெரி மத்தம் கொளீஇ, நிரைப் புறத்து
அடி புதை தொடுதோல் பறைய ஏகி,
கடி புலம் கவர்ந்த கன்றுடைக் கொள்ளையர்,             10
இனம் தலைபெயர்க்கும் நனந்தலைப் பெருங் காட்டு,
3
அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல,
பகலிடை நின்ற பல் கதிர் ஞாயிற்று
உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை,
புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர்,          15
தண் கார் ஆலியின், தாவன உதிரும்
பனி படு பல் மலை இறந்தோர்க்கு
முனிதகு பண்பு யாம் செய்தன்றோ இலமே!

பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது;
தோழி கிழத்திக்குச் சொல்லியதூஉம் ஆம்.
மாமூலனார் பாடல்

கி.மு. காலத்துப் பாடல்



முருங்கைப் பூ

No comments:

Post a Comment