Pages

Wednesday, 6 April 2016

நற்றிணை Natrinai 91

பெருநல் ஈகை என்பது திருமணம்


தோழி, சேர்ப்பன் தன் தேரில் உன்னை மணம் புரிந்துகொள்ள வந்துகொண்டிருக்கிறான். இது உனக்குத் தெரிந்தது தானே!- தோழி தலைவியிடம் சொல்கிறாள்.

புன்னைப் பூக்கள் உதிர்ந்து நிழலே பூத்துக்கிடக்கும் கடற்கரை. அந்தக் கரையை மோதிப் பாயும் கடல். அந்தக் கடலில் மேயும் சிறுமீன். சிவந்த கடைக்கண் கொண்ட சிறுமீன். பதுங்கியிருக்கும் (உடங்கு) அந்தச் சிறுமீன் நாரைக்கு இரை. தன் பெட்டையுடன் சேர்ந்து மேயும் நாரைக்கு இரை. புன்னைமரத்தின் உச்சிக் கிளையில் கட்டிய கூட்டில் அதன் குஞ்சு. அந்தக் குஞ்சு தன் தாயைக் கூப்பிடுகிறது. தந்தை-நாரை அந்த மீனைக் கொண்டு சென்று குஞ்சுக்கு ஊட்டுகிறது. இது கானல் தோட்டம் (படப்பை).  

அந்தத் தோட்டப் பகுதியில் நம் சிறுகுடி. பெருநல் ஈகை (திருமணம்) புரியக் காத்திருக்கும் சிறுகுடி. சேர்ப்பன் தேரில் வருகிறான். விரைந்து பாயும் குதிரை (கடுமா) பூட்டிய தேரில் வருகிறான். வண்டுகள் ஒலித்துக்கொண்டு மொய்க்கும் மாலையை அணிந்துகொண்டு வருகிறான். பட்டப்பகலில் வருகிறான். இது உனக்குத் தெரிந்ததுதானே!

பூமாலை, ஆண் பெண் பறவைகள் சேர்ந்து இரை தேடல், குஞ்சுக்கு ஊட்டல் முதலான இறைச்சிப் பொருள்களும், உள்ளுறை உவமங்களும் வாழ்க்கைப் பாங்கை உணர்த்துவதை உன்னிப்பாக எண்ணிப் பார்த்து உணர்ந்துகொள்ளலாம். 

இவற்றையும் தலைவி உணர்ந்துள்ளாள் என்பதை இப்பாடலில் வரும் "நீ உணர்ந்ததுவே" என்னும் தொடர் உணர்த்துகின்றது. 
 
பாடல் (சொல் பிரிப்புப் பதிவு) 91. நெய்தல்

நீ உணர்ந்தனையே தோழி! வீ உகப்
புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப்
பாடு இமிழ் பனிக் கடல் துழைஇ, பெடையோடு
உடங்கு இரை தேரும் தடந் தாள் நாரை
ஐய சிறு கண் செங் கடைச் சிறு மீன்,   5
மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பை,
தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும்
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப்
பெரு நல் ஈகை நம் சிறு குடிப் பொலிய,
புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க்   10
கடு மாப் பூண்ட நெடுந் தேர்
நெடு நீர்ச் சேர்ப்பன் பகல் இவண் வரவே?

தோழி, தலைமகட்கு வரைவு மலிந்து உரைத்தது.
பிசிராந்தையார் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்

திருமணம் \ இக்காலம்

6 comments: