Pages

Tuesday, 5 April 2016

நற்றிணை Natrinai 90

காதலன் ஊஞ்சலாட்டும்படி ஊரவை எங்களைக் கூட்டி வைக்கவில்லையே


தோழியர் ஆட்டும் ஊஞ்சலில் அவள் ஆட மறுக்கிறாள். ஆட மறுக்கும் அந்தக் குறையைக் கேட்டு வேந்தன் அவை தீர்த்து வைக்கவில்லையாம். அதனால் அந்த அவை பயனில்லாத அவையாம். – தோழி சொல்கிறாள்.

 
அந்தப் பழமையான ஊரில் ஆட்டக்கலை விழா நடக்கிறது. ஊரில் ஒரே ஆரவாரம். ஊரில் இருப்போர் பலர். அவர்களின் பூப்போட்ட ஆடைகள் அழுக்கு (புகாப் புகர்) படிந்துள்ளன. அந்த ஊரில் ஒரு புலைத்தி (ஊர்த் துணியைத் துவைத்துத் தரும் வண்ணாத்தி). வறுமை அறியாத புலைத்தி. பகலிலே அழுக்கைத் துவைத்து, அதிலுள்ள பூக்கள் பொலிவுறும் கலிங்கமாகத் (ஆடையாகத்) தருகிறாள். அதனை இந்தத் தலைவி உடுத்திக்கொண்டிருக்கிறாள். தோழிமார் அவள் கழுத்தில் மாலை அணிவித்திருக்கின்றனர்.

பனை நாரால் திரிக்கப்பட்ட ஊஞ்சல் கயிறு தொங்குகிறது. அதில் ஆடும்படி, தோழிமார் பூத்த கண்களுடன் ஓடியாடி அவளை ஊஞ்சலில் ஆட்டுகின்றனர். அவள் ஆட மறுக்கிறாள். அழுதுகொண்டு விலகிச் செல்கிறாள். அவள் வறுமையில் வாடும் பெண். அவளுக்கு அழகான சிறிய கூந்தல்.

ஊஞ்சலாட மறுத்துக் கூச்சலிடுகிறாளே, அந்தக் கூச்சலைப் போக்கி அவளுக்கு வேண்டியதைச் செய்யாமல், ஊர் மன்றம் இருக்கிறதே, அந்த மன்றம் உண்மையில் பயன் இல்லாத மக்களைத் தான் கொண்டிருக்கிறது.
 
பாடல் (சொல் பிரிப்புப் பதிவு) 90. மருதம்

ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்,
உடையோர் பன்மையின் பெருங் கை தூவா,
வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த
புகாப் புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடு
வாடா மாலை துயல்வர, ஓடி,    5
பெருங் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூங் கண் ஆயம் ஊக்க, ஊங்காள்,
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி,
நல்கூர் பெண்டின், சில் வளைக் குறுமகள்
ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா 10
நயன் இல் மாக்களொடு கெழீஇ,
பயன் இன்று அம்ம, இவ் வேந்துடை அவையே!

தோழி, தலைமகளுக்கு உரைப்பாளாய், பாணனை நெருங்கி வாயில்மறுத்தது.
அஞ்சில் அஞ்சியார் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்


ஊர்த்துணி துவைக்கும் தொழிலாளர்
வண்ணான், வண்ணாத்தி
வண்ணான், வண்ணாத்தி (புலைத்தி)

No comments:

Post a Comment