Pages

Thursday, 28 April 2016

நற்றிணை Natrinai 102

கானக் குறவன் மடமகள்


காம உணர்வு மிகுதியால் தலைவி தான் காவல் காக்கும் வயலில் மேயும் கிளியிடம் பேசுகிறாள்.

வளைந்த தினைக் கதிர்கள் குறையும்படிச் சிவந்த வாயால் கிள்ளிச் செல்லும் கிளிகளே! 

அச்சம் கொள்ளாமல் வயிறார உண்ணுங்கள். 
கிள்ளிச் சென்று உங்கள் குறைகளைத் தீர்த்துக்கொள்ளுங்கள். 
அதன் பின்னர் என்னுடைய குறையையும் தீர்த்து வையுங்கள். 

என் கைகளால் தொழுது  உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். 

பலவாகப் பழுத்துக் கிடக்கும் பலா மரங்களை உடைய மலைச் சாரலில் வாழும் உங்களது உறவினர்களிடம் செல்வீர்கள் ஆயின், அந்த மலைக்கு உரியவனான என் உரிமையாளனுக்குச் சொல்லுங்கள். 

இந்த மலையில் கானக் குறவரின் மடப்பெண் தினைக்காவல் புரிந்துகொண்டு தனியே இருக்கிறாள் என்று சொல்லுங்கள்.
 
(சொல் பிரிப்புப் பதிவு)
பாடல் 102 குறிஞ்சி

கொடுங் குரற் குறைத்த செவ் வாய்ப் பைங் கிளி 
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு 
நின் குறை முடித்த பின்றை என் குறை 
செய்தல் வேண்டுமால் கை தொழுது இரப்பல் 
பல் கோட் பலவின் சாரல் அவர் நாட்டு 
நின் கிளை மருங்கின் சேறிஆயின் 
அம் மலை கிழவோற்கு உரைமதி இம் மலைக் 
கானக் குறவர் மட மகள் 
ஏனல் காவல் ஆயினள் எனவே

காமம் மிக்க கழிபடர்கிளவி
செம்பியனார் பாடல்

கி.மு. 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய பாடல்


செவ்வாய்ப் பைங் கிளி 

No comments:

Post a Comment