வெல்போர் இராமன்
தொடு
திருமணத்துக்கு முன் எங்கள் உறவைப் பழித்துத்
தூற்றிய பெண்களின் வாய் திருமணத்துக்குப் பின்னர் மூடிக்கொள்ளும் – என்கிறாள் அவள்.
1
வளைந்த திமில் படகில் சென்ற பரதவருக்கு நல்ல
வேட்டை கிடைத்தது. அவர்களது சிறுகுடியில் மீன்-புலவு நாற்றும் பெரிதாக வீசிற்று. குறுகிய
கண்ணை உடைய தம் வலையின் பயனை அவர்கள் பெரிதும் பாராட்டினர். தமக்குக் கிடைத்த அயிலை
மீனை அவர்கள் தம் பாக்கத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் பகிர்ந்தளித்தனர். – இப்படிப்பட்ட
மீன்துறையை உடையவன் அவன் (தலைவன்).
2
அவன் நம்மோடு இருந்த உறவு பற்றி அலரும் வாயை
உடைய ஊர்ப் பெண்டிர் கமுக்கமாகப் பேசிக்கொள்கின்றனர். (அம்பல்
தூற்றுகின்றனர்). இது முன்பு இருந்த நிலை.
3
இனி, திருமணம் நடந்த பின்னர் என்ன செய்வார்கள்?
வாய் அவிந்து போவார்கள். எப்படி வாய் அவிந்து போவார்கள்? தொன் முது கோடியில் (தனுஷ்கோடியில்) இராமன் மறை (வேதம்) ஓதினான். இலங்கைப் போரில் வென்ற பின் வந்து அமர்ந்துகொண்டு
மறை ஓதினான். பல விழுதுகளை உடைய ஆலமரத்தடியில் இருந்துகொண்டு மறை ஓதினான். அதனைக் கேட்டுக்கொண்டு
ஆலமரத்தடியில் இருந்தவர்கள் எல்லாரும் வாயவிந்து போனார்கள். அதுபோல அம்பல் தூற்றும்
மகளிரின் வாய் அவிந்து போகும்.
தொன்முது கோடி கவுரியர் (பாண்டியர்) ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அது ‘கானலம்
பெருந்துறை’ என்று வழங்கப்பட்ட கடலோர நிலப் பரப்பு. அங்குப் பொன்னைப் போல் பூக்கும்
ஞாழல், புன்னை ஆகிய மரங்கள் பூக்களைக் கொட்டும். அதன் பூக்களையும், தழைகளையும் சேர்த்து
அங்குள்ள மகளிர் விழாக் காலங்களில் தழையாடை கட்டி அணிந்துகொள்வர்.
பாடல் சொல் பிரிப்புப் பதிவு
திணை நெய்தல்
1
கொடுந் திமிற் பரதவர்
வேட்டம் வாய்த்தென,
இரும் புலாக் கமழும்
சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங் கண் அவ்
வலைப் பயம் பாராட்டி,
கொழுங் கண் அயிலை
பகுக்கும் துறைவன்
2
நம்மொடு புணர்ந்த கேண்மை
முன்னே 5
அலர் வாய்ப் பெண்டிர்
அம்பல் தூற்ற,
பலரும் ஆங்கு அறிந்தனர்
மன்னே; இனியே
3
வதுவை கூடிய பின்றை,
புதுவது
பொன் வீ ஞாழலொடு
புன்னை வரிக்கும்
கானல் அம் பெருந்
துறைக் கவினி மா நீர்ப் 10
பாசடைக் கலித்த கணைக்கால்
நெய்தல்
விழவு அணி மகளிர்
தழை அணிக் கூட்டும்
வென் வேற் கவுரியர்
தொல் முது கோடி
முழங்கு இரும் பௌவம்
இரங்கும் முன் துறை,
வெல்போர் இராமன் அரு மறைக்கு
அவித்த 15
பல் வீழ் ஆலம்
போல,
ஒலி அவிந்தன்று, இவ்
அழுங்கல் ஊரே.
தலைமகன் வரைவு மலிந்தமை
தோழி தலைமகட்குச் சொல்லியது.
மதுரைத் தமிழ்க் கூத்தனார்
கடுவன் மள்ளனார் பாடல்
கி.மு.
காலத்துப் பாடல்
No comments:
Post a Comment