மூதுரை
12 ஆம் நூற்றாண்டு ஔவையார் பாடியது
பாடல்
விளக்கம் தொடுப்பு
![]() |
| ஔவையார் |
வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு. (கடவுள் வாழ்த்து)
நன்றி ஒருவற்குச் செய்தக்காலந்நன்றி
என்று தருங்கொ லெனவேண்டா-நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்டநீரைத்
தலையாலே தான்தருத லால். (1)
நல்லா ரொருவர்க்குச் செய்தஉபகாரம்
கல்மே லெழுத்துப்போற் காணுமே-அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்தஉபகாரம்
நீர்மே லெழுத்திற்கு நேர். (2)
இன்னா இளமை வறுமைவந்தெய்தியக்கால்
இன்னா அளவி லினியவும்-இன்னாத
நாளல்லா நாட்பூத்த நன்மலரும்போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு. (3)
அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு
சுட்டாலும் வெண்மை தரும். (4)
அடுத்து முயன்றாலு மாகுநாளன்றி
எடுத்த கருமங்க ளாகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம்
பருவத்தா லன்றிப் பழா. (5)
உற்ற இடத்தில் உயிர்வழங்குந்தன்மையோர்
பற்றலரைக் கண்டாற் பணிவரோ-கற்றூண்
பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் தாங்கின்
தளர்ந்து வளையுமோ தான். (6)
நீரளவே யாகுமாம் நீராம்பல்தான்கற்ற
நூலளவே யாகுமாம் நுண்ணறிவு-மேலைத்
தவத்தளவே யாகுமாந் தான்பெற்ற செல்வம்
குலத்தளவே யாகுங் குணம். (7)
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொற் கேட்பதுவும் நன்றேஎ-நல்லார்
குணங்க ளுரைப்பதுவும் நன்றேஅவரோ
டிணங்கி யிருப்பதுவும் நன்று. (8)
தீயாரைக் காண்பதுவுந் தீதே திருவற்ற
தீயார்சொற் கேட்பதுவுந் தீதேஎ-தீயார்
குணங்க ளுரைப்பதுவுந் தீதேஅவரோ
டிணங்கி யிருப்பதுவுந் தீது. (9)
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
நல்லா ரொருவர் உளரேல்அவர்பொருட்
டெல்லார்க்கும் பெய்யு மழை. (10)
பண்டு முளைப்ப தரிசியேயானாலும்
விண்டுமி போனால் முளையாதாம்-கொண்டபேர்
ஆற்ற லுடையார்க்கும் ஆகாதளவின்றி
ஏற்ற கருமஞ் செயல். (11)
மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல்சிறிய ரென்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்ணீரு மாகா ததனருகேசிற்றூறல்
உண்ணீரு மாகி விடும். (12)
கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்-சவைநடுவே
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
மாட்டா தவன்நல் மரம். (13)
கான மயிலாடக் கண்டிருந்தவான்கோழி
தானு மதுவாகப் பாவித்துத்-தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி. (14)
வேங்கை வரிப்புலிநோய் தீர்த்தவிடகாரி
ஆங்கதனுக் காகார மானாற்போல்-பாங்கறியாப்
புல்லறி வாளர்க்குச் செய்தஉபகாரங்
கல்லின்மே லிட்ட கலம். (15)
அடக்க முடையா ரறிவிலரென்றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா-மடைத்தலையில்
ஓடுமீ னோட உறுமீன்வருமளவும்
வாடி யிருக்குமாங் கொக்கு. (16)
அற்ற குளத்தின் அறுநீர்ப்பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவல்லர்-அக்குளத்திற்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி யுறுவார் உறவு. (17)
சீரியர் கெட்டாலும் சீரியரேசீரியர்மற்
றல்லாதார் கெட்டாலங் கென்னாகும்-சீரிய
பொன்னின் குடமுடைந்தாற் பொன்னாகு மென்னா
மண்ணின் குடமுடைந்தக் கால் (18)
ஆழ அமுக்கி முகக்கினும்ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால்நாழி-தோழி
நிதியுங் கணவனும் நேர்படினும் தந்தம்
விதியின் பயனே பயன். (19)
உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன்பிறவா
மாமலையி லுள்ள மருந்தேபிணிதீர்க்கும்
அம்மருந்து போல்வாரு முண்டு. (20)
இல்லா ளகத்திருக்க இல்லாததொன்றில்லை
இல்லாளும் இல்லாளே யாமாயின்-இல்லாள்
வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும். (21)
எழுதியவா றேகாண் இரங்குமட நெஞ்சே
கருதியவா றாமோ கருமம்-கருதிப்போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காயீந்ததேல்
முற்பவத்திற் செய்த வினை. (22)
கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே-விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே[பிடித்து
சீரொழுகு சான்றோர் சினம். (23)
நற்றா மரைக்கயத்தில் நல்லன்னஞ்சேர்ந்தாற்போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்-கற்பிலா[போல்
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டிற்
காக்கை உகக்கும் பிணம். (24)
நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு-நெஞ்சிற்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர். (25)
மன்னனு மாசறக் கற்றோனுஞ்சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத்
தன்தேச மல்லாற் சிறப்பில்லைகற்றோற்குச்
சென்றஇட மெல்லாம் சிறப்பு. (26)
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார்சொற்கூற்றம்
அல்லாத மாந்தர்க் கறங்கூற்றம்-மெல்லிய
வாழைக்குத் தானீன்ற காய்கூற்றங் கூற்றமே
இல்லிற் கிசைந்தொழுகாப் பெண். (27)
சந்தன மென்குறடு தான்தேய்ந்தகாலத்துங்
கந்தங் குறைபடா தாதலால்-தந்தந்
தனஞ்சிறிய ராயினுந் தார்வேந்தர் கேட்டால்
மனஞ்சிறிய ராவரோ மற்று. (28)
மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல
உருவும் உயர்குலமு மெல்லாம்-திருமடந்தை
ஆம்போ தவளோடு மாகும்அவள்பிரிந்து
போம்போ தவளொடு போம். (29)
சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாங் கண்டீர் மரம். (30)
மூதுரை மூலமும் உரையும்முற்றிற்று.

No comments:
Post a Comment