Pages

Tuesday, 24 November 2015

கலித்தொகை Kalittogai 15

பொருள் தேடச் சென்றால் வழிப்பறி செய்து கொல்வோரிடம் தப்பி மீண்டுவர முடியுமா? பெரியோரிடம் சென்று தவக்கோலத்துடன் மீண்டால் இவள் கண்ணீரை நிறுத்த முடியுமா? – இப்படி வினவி தோழி தலைவன் பிரிவைத் தடுக்க முயல்கிறாள்.  
இரலை மான்
எறுழ் = கழுத்து
மழவர் இரலைமான்
எறுழ் மயிர் போல்
தாடி கொண்டவர்
1
அன்போ, அருளோ இல்லாமல் மறவர் பொருளைப் பிடுங்கிக்கொள்வதோடு மட்டும் இல்லாமல் துன்பறுத்தி மகிழும் வழியில் செல்கிறாய். அந்த மறவர் வில் நாணை இழுத்து அதன் வலிமையை ஆராயும்போது அந்த ஒலி சிங்கத்தின் இடி முழக்கம் போல இருக்கும். அவர்கள் அரசனை எதிர்த்துப் போரிட்டாலும் தோற்றோடச் செய்யும் வலிமை மிக்கவர். வெற்றி காணாத அம்பை அவர்கள் தொடுப்பதற்கே நாணுவர். கிளைக்கொம்பு இரலை மான் போன்ற தாடி உடையவர்கள்.
அரிமான் = சிங்கம்
இரலை = ஆண்மான்
எறுழ் நோக்கு = நிமிர்ந்த பார்வை
2
அசோகந்தளிர் போன்ற இவள் மேனி அழகு பசலைநிறம் கொள்ளும்படி விட்டுவிட்டுச் சென்றால், இப்படிப்பட்ட வழியில் நீ ஈட்டிய செல்வத்தோடு மீள முடியுமா?
புரிபு = விரும்பி
3
பெரியோரிடம் சென்று ஞானம் பெற்று வருகிறேன் என்கிறாய். அப்படிப் பெற்றுத் தவக்கோலத்துடன் மீண்டால், மதியம் போல் ஒளி வீசும் இவள் முகமானது கிரகணம் பிடித்து  பாம்பு விழுங்கிய நிலாப் போல மாறிக் கிடப்பதை எவ்வாறு சுவைக்கமுடிக்கும்?
புரையோர் = மேலோர்
படிவம் = தவக்கோலம்
4
பின்னிய இவள் கூந்தலைத் தடவிக்கொடுத்துவிட்டு நீ பிறர் நாட்டுக்குச் சென்றால், நீல மலர் போன்ற இவள் கண்கள் கலங்கி, எரியும் தீயிலிருந்து சொட்டும் சுடு-எண்ணெய் போலக் கண்ணீர் சொட்டுவதை நிறுத்த முடியுமா
கண் கலுழ்பு = கண் கலங்கி
புரை – உவம உருபு
முளைப்பாலி |
முளைப்பாரி |
நவதானிய முளை |
திருவிழாவில்
தெய்வத்துக்குப் படையல்

விளையாட்டுத் தோழிமார்
முளைப்பாலி போல்
நகைப்பவர்களாம் 
5, 6
இப்படியெல்லாம் நான் சொல்வதைப் போற்றி நினைத்துப்பார். பொருள் வளத்தை எந்த நாளிலும் தேடிக்கொள்ளலாம். முளைப்பாலி போல் மலர்ந்து சிரிக்கும் விளையாட்டுத் தோழிமாருடன் திரியும் இவளது இளமை கழிந்து போன பின்னர் மீட்டுத்தந்து துய்க்க முடியுமா?

பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
எண் - 15
திணை - பாலை
கி.மு. காலத்துப் பாடல்

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு
1
அரி மான் இடித்தன்ன, அம் சிலை வல் வில்
புரி நாண், புடையின், புறம் காண்டல் அல்லால்
இணைப் படைத் தானை அரசோடு உறினும்
கணைத் தொடை நாணும் கடுந் துடி ஆர்ப்பின்,
எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை 5
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி,
உருத்த கடுஞ் சினத்து, ஓடா மறவர்,
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, அன்போடு
அருள் புறம் மாறிய ஆர் இடை அத்தம்
இது தரவு
2
புரிபு நீ புறம் மாறி, போக்கு எண்ணி, புதிது ஈண்டிப் 10
பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம்
பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக்கால்;
3
பொய் அற்ற கேள்வியால், புரையோரைப் படர்ந்து, நீ
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ          15
தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம்; அம் முகம்,
பாம்பு சேர் மதி போல, பசப்பு ஊர்ந்து தொலைந்தக்கால்;
4
பின்னிய தொடர் நீவி, பிறர் நாட்டுப் படர்ந்து, நீ
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ
புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனா,             20
திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்குங்கால்;
இவை மூன்றும் தாழிசை
5
என ஆங்கு,
இது தனிச்சொல்
6
அனையவை போற்றி, நினைஇயன நாடிக் காண்;
வளமையோ வைகலும் செயலாகும்; மற்று இவள்
முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த           25
இளமையும் தருவதோ, இறந்த பின்னே.
இது சுரிதகம்
பிரிவுணர்த்திய தலைமகற்கு, தோழி, தலைமகளது ஆற்றாமையும் இளமைய தருமையுங் கூறி, நீர்பிரிந்து பெய்யக் கருதியவை எக்காலத்தும் செய்யலாம். பொருளால், கழிந்த இளமைமீட்கலாமோ வெனக் கூறியது.



No comments:

Post a Comment