Pages

Tuesday, 24 November 2015

கலித்தொகை Kalittogai 14

நீ என் அழகைச் சொல்லிப் பாராட்டுகிறாய். உன் நோக்கம் புரிந்துகொண்டேன். பொருளின் பெருமையைக் கூறிப் பிரியப்போகிறாய் என்பதைத் தெரிந்துகொண்டேன் – இப்படித் தலைவி கூறுவதாகத் தோழி தலைவனிடம் கூறி அவன் தலைவியை விட்டுப் பிரிய முயல்வதைத் தடுத்துப்பார்க்கிறாள்.
மௌவல் = மரமல்லிகை என்பர்
1
உன் தோள் – அழகாகப் பருத்து மென்மையாக உள்ளது. தலையணை போல் தூங்குவதற்கு இனிமையானது. உன் கண் – என்னை உண்பது போல் உள்ளது. அழகிய இரண்டு நீல மலர்களை பூத்திருப்பது போல உள்ளது. உன் பல் – மரமல்லிகைப் பூப் போல மணம் பரப்பிக்கொண்டு வரிசையாக மாநிற எயிறுகளில் பூத்துக் கிடக்கிறது. உன் நெற்றி – மணம் வீசுகிறது. உன் கூந்தல் – மழைமேகம் போலக் கருகரு-வென இருக்கிறது. உன் முலை – பூத்துக்கிடக்கிறது. உன் அல்குல் – விரிந்து காட்டுகிறது. உன் வளையல் – வெண்ணிறத்துடன் சிலவாக ஒளிர்கிறது. செம்மையானவளே! இப்படி எல்லாம் இருக்கிறாய் என்று இட்டுக்கட்டிப் பேசுகிறாய். இனிமையாப் பேசுகிறாய். இன்பம் ஊட்டிப் பேசுகிறாய். என்னை விட்டுவிட்டுப் போகப்போவதைச் சொல்லாமல் சொல்கிறாய். நான் தெரிந்துகொண்டேன். உண்மையில் இது விலகுதல்தான்.
அணை = தலையணை
இன்னாங்கு = இனிமையாக ஏமாற்றிச் செய்ய்யும் தந்திரம்
செய்யாயோ = செம்மையானவளே
துனி = விலகல்
மாரி = மழைமேகம்
மௌவல் = மரமல்லிகைப் பூ
2
உலகில் மதிக்கத்தக்கது செல்வத்தைத் தவிர வேறு என்ன இருக்கிறது. மான் போன்று மருளும் உன் பார்வை இதனை விளங்கிக்கொள்ளாமல் மயங்குகிறதே! என்கிறாயோ?
3
பொருள் இல்லாமல் காதலர் என்ன செய்வார்கள் என்று யாரோ சிலர் கூறுவதைக் கேட்டு அதுதான் பொருள் என்று மதித்துப் பிரிந்து செல்ல முடிவெடுத்திகிறாயோ?
4
சேர்ந்து வாழும் செம்மை நெறியைப் புறக்கணித்துவிட்டுச் சேர்க்கும் பொருள் இவ்வுலக வாழ்க்கைக்கும், மறுமை வாழ்க்கைக்கும் பகைப்பொருளாக அமைவது உனக்குத் தெரியவில்லையா?  
5, 6
அப்படியானால் என்னையும் ஒரு பொருளாக மதி. நாம் ஒருவரோடு ஒருவர் கைகளால் கட்டித் தழுவிக்கொண்டிருப்பதை நழுவ விடும் பொருளை நீ விரும்புவதை விட்டுவிடு. அதுதான் நிலைபெற்றிருக்கும் பொருள்.

பாடியவர் – பாலைபாடிய பெருங்கடுங்கோ
எண் - 14
திணை - பாலை
கி.மு. காலத்துப் பாடல்

பாடல் – சொல் பிரிப்புப் பதிவு

1
'அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள்,
துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண் கண்,
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல்,
மணம் நாறு நறு நுதல், மாரி வீழ் இருங் கூந்தல்,
அலர் முலை ஆகத்து, அகன்ற அல்குல்,         5
சில நிரை வால் வளை, செய்யாயோ!' என,
பல பல கட்டுரை பண்டையின் பாராட்டி,
இனிய சொல்லி, இன்னாங்குப் பெயர்ப்பது,
இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே

இது தரவு
2
'பொருள் அல்லால் பொருளும் உண்டோ ?' என, யாழ நின்             10
மருளி கொள் மட நோக்கம், மயக்கப்பட்டு அயர்த்தாயோ?
3
'காதலார் எவன் செய்ப, பொருள் இல்லாதார்க்கு' என,
ஏதிலார் கூறும் சொல் பொருளாக மதித்தாயோ?
4
செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு, அப் பொருள்
இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ?           15
இவை மூன்றும் தாழிசை
5
அதனால்,
இது தனிச்சொல்
6
எம்மையும் பொருளாக மதித்தீத்தை; நம்முள் நாம்
கவவுக் கை விடப் பெறும் பொருட் திறத்து
அவவுக் கைவிடுதல்; அது மனும் பொருளே.
இது சுரிதகம்

தலைமகனாற் பிரிவுணர்த்தப்பட்ட தோழி, தலைமகற்கு ‘முன்னையிற் சிறப்பை எம்வயிற் பாராட்டியதெல்லாம் எவ்வயிற் பிறந்த வெறுப்பென்பது இப்பொழுதறிந்தேன்; இவ்வகைப்பட்ட போக்கு நினக்கு எவ்வகையான் வந்தது’ என, அவன் செலவழுங்கச் சொல்லியது.



No comments:

Post a Comment