சனிநீர் ஆடு 16
ஔவையார்
சனி என்னும் ஊழ்த் தொல்லையின் நீர்மை நம்மை ஆட்டிப் படைக்கும். அதனை நாம் ஆட்டிப் படைக்க வேண்டும்.
சனி = போகூழ் = சனீசுவரன்
சனிநீர் = போகூழின் நீர்மை
நீர்மை = ஒழுங்குமுறை
போகூழால் தோன்றும் மடி– என்பது வள்ளுவர் வாக்கு
ஊழ் என்பது செடியில் தோன்றும் மலர்
ஊழ்த்தல் இதன் வினைச்சொல்
தோன்றுதல் என்பது இதன் பொருள்
இணர் ஊழ்த்தும் நாறா மலர் – திருக்குறள்
ஒருவருக்கு நன்மை உண்டாவதும், (ஆகூழ் அமைவதும்), தீமை உண்டாவதும் (போகூழ் அமைவதும்) அவரது பிறவிக்குள்ளேயே ஊழ்த்துக் கிடக்கிறது. உடலுக்குள் உயிர் இருப்பது கண்ணுக்குத் தெரிவதில்லை. அறிவுக்குத் தெரிகிறது. உயிருடலுக்குள் ஊழ் இருப்பது அறிவுக்கும் புலப்படுவதில்லை. உய்த்துணரினும் அது ஆக்கம் தரும் ஆகூழாக இருக்குமா, இழப்பைத் தரும் போகூழாக இருக்குமா என்பதை நம்மால் தீர்மானிக்க முடியாது. இதுவே சனிநீர்.
சனிக் கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இதனை அறப்பளீசுரர் சதகம் இப்படிப் பாடுகிறது.
வரும் ஆதி வாரம் தலைக்கு எண்ணெய் ஆகாது
வடிவம் மிகு அழகு போம்
வளர் திங்களுக்கு அதிக பொருள் சேரும் அங்கார
வாரம் தனக்கு இடர் வரும்
திரு மேவு புதனுக்கு மிக புத்தி வந்திடும்
செம்பொனுக்கு உயர் அறிவு போம்
தேடிய பொருள் சேதமாம் வெள்ளி சனி எண்ணெய்
செல்வம் உண்டு ஆயுள் உண்டாம்
பரிகாரம் உளது ஆதி வாரம் தனக்கு அலரி
பௌமனுக்கு ஆன செழு மண்
பச்சறுகு பொன்னவர்க்கு ஆம் எருத் தூள் துளி
பார்ப்பவர்க்கு ஆகும் எனவே
அரிதாம் அறிந்த பேர் எண்ணேய் தேய்த்தே முழுக்கு ஆடுவார்
அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினை சதுர துர கிரி வளர்
அரப்பளீசுர தேவனே
இந்தச் சனிநீரில் நாம் குளிக்கத்தான் வேண்டும்.
பயன் சனியின் கையில். ஊழின் கையில்.
சனிக்கிழமை எண்ணெய் தேய்த்துக் குளி
சனி = ஜன்னி = குளிர்
குளிர்ந்த நீரில் குளி
தை நீர் ஆடு
மார்கழி நீர் ஆடு
என்றெல்லாம் மேம்போக்காக இதற்குப் பொருள் கூறுவர்.
நீராடல் என்பதற்குத் தலைமுழுகு = விட்டுவிடு என்றும் பொருள் காண்பதுண்டு.

No comments:
Post a Comment