தாய்க்குரைத்த பத்து
நெய்தல்
அன்னை என்பவள் இங்குச் செவிலித்தாய்.
செவிலித் தாயிடம் தோழி கூறும் செய்திகள்
இந்தப் பத்துப் பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன.
காதலன் காதலி உறவு திருமணமாக மாறுகிறது.
தலைவனின் தேர் கடலோரக் கானல் மணலில் வருகிறது.
திருமணச் செய்தியுடன் வருகிறது.
தோழிக்கும் தலைவிக்கும் மகிழ்ச்சி.
தாயும் மகிழவேண்டும் என்பது அவர்களின் ஆவல்.
101
அன்னை! பூ பிறரைக் கவர்வது போலப் பிறரை உண்ணும் கண்ணை உடையவள் உன் மகள். அவளை நினைவு நோயால் வருத்திக்கொண்டிருக்கும் அவளது கொண்கன் தேர், அதோ பார், வந்துகொண்டிருக்கிறது. நிலத்தில் ஏறிப் படரும் அடும்புக் கொடி அறுபடவும், நீரில் பூக்கும் நெய்தல் அலைமோதவும் வந்துகொண்டிருக்கிறது. திருமணத்துக்காக வந்துகொண்டிருக்கிறது.
102
அவர் தேரில் ஒலிக்கும் மணியோசை நம் ஊர்க் கடலில் பறவைக் கூட்டம் குரல் எழுப்புவது போல் கேட்கிறது.
103
அவன் ஊரிலுள்ள துறை புன்னை, ஞாழல் ஆகிய பூக்கள் உதிராவா என ஏங்கிக்கொண்டிருக்கும். அப்படியே அவனுக்காக இவள் அழகு ஏங்கிக்கொண்டிருக்கும்.
104
நம் ஊரில், பலரும் உறங்கும் நேரத்தில், மெல்ல மெல்ல (நள்ளென) வருகிறதே தேர், அதில் வரும் மகன், உன் மகளின் பெருமகன் ஊரும் அவனைப் போலவே செல்வ-வளம் மிக்கது.
105
முத்து மணலில் ஏறி மின்னும் துறையை உடையது அவன் கடல். அவன் வருவது அறிந்து உன் மகளின் நெற்றி பொன்னைக் காட்டிலும் சிவந்து பொலிவு பெற்றுள்ளது.
![]() |
| அன்னம் சங்கில் ஏறி விளையாடல் |
அவர் நாட்டில் ஆண்-அன்னம் தன் பெண்-அன்னத்தை மிதிப்பதாக எண்ணிக்கொண்டு சங்கின் மேல் ஏறி அமர்ந்திருக்கும். இவள் மார்பகம் அந்தச் சங்கு போல் உருண்டுகொண்டிருப்பதைப் பார்.
107
இவள் அவனை நினைத்து மெலிந்துகொண்டிருக்கிறாள். (படர் நினைந்து) கடல்-அலை ஓசை கேட்கும்போதெல்லாம் அவன் தேரோசையோ என்று தூங்காமல் கிடக்கிறாள்.
108
அவன் முண்டகப் பூ மலரும் கடல் சேர்ந்த நிலத்தின் தலைவன். அவன் இவள் தோளை விட்டு விலகியிருக்கிறான். அவள் தோள் என்ன ஆகுமோ?
109
அவன் ஊர் நெய்தல் மலர் தன் துளை கொண்ட காம்பை உயர்த்திப் பூத்திருக்கிறது. அவன் இவளுக்குத் தலையளி (முதல் உடலுறவு) செய்தான். அவன் இவளை விட்டுவிட்டு இருக்கும்போதும் அந்தத் தலையளி-நேரம் பலநாளாக ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருக்கிறதே!
110
இவள் மேனியில் பொன்-நிறம் பூத்திருப்பதைப் பார்த்து “ஏன்” என்று வினவுகின்றனர். புன்னைப் பூக்கள் கொட்டி அவன் துறை பொன்னிறம் பெற்றிருக்கிறது. அங்கேயும் இந்த வினா எழும்புமோ? இதுதான் விதியோ (பால்)
ஐங்குறுநூறு 11 ஆம் பத்து
திணை – நெய்தல்
1 ஆம் பத்து
பாடல் – 101-110
தாய்க்குரைத்த பத்து
புலவர் – அம்மூவனார்
பாடல் சொல் பிரிப்புப்பதிவு
101
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! உதுக் காண்
ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு
நெய்தல் மயக்கி வந்தன்று, நின் மகள்
பூப் போல் உண்கண் மரீஇய
நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே. 5
அறத்தோடு நின்ற பின்னர் வரைதற் பொருட்டுப் பிரிந்த தலைமகன் வரைவோடு புகுந்தவழித் தோழி செவிலிக்குக் காட்டிச் சொல்லியது. 1
102
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்
நீல் நிறப் பெருங் கடல் புள்ளின் ஆனாது,
துன்புறு துயரம் நீங்க,
இன்புற இசைக்கும், அவர் தேர் மணிக் குரலே.
இதுவும் அது. 2
103
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னையொடு
ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன்
இவட்கு அமைந்தனனால் தானே;
தனக்கு அமைந்தன்று, இவள் மாமைக் கவினே.
அறத்தொடு நின்ற தோழி, வதுவை நிகழாநின்றுழி, தாய்க்குக் காட்டி உவந்து சொல்லியது. 3
104
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்ப்
பலர் மடி பொழுதின், நலம் மிகச் சாஅய்
நள்ளென வந்த இயல் தேர்ச்
செல்வக் கொண்கன் செல்வனஃது ஊரே.
புதல்வற் பெற்றுழித் தலைமகன் மனைக்கண் சென்ற செவிலிக்கு, முன்பு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவன் ஊர் நன்மை காட்டிச் சொல்லியது. 4
105
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! முழங்குகடல்
திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும்
தண்ணம் துறைவன் வந்தென,
பொன்னினும் சிவந்தன்று; கண்டிசின் நுதலே.
அறத்தொடு நின்ற பின் வேண்டுவன தருதற்குப் பிரிந்த தலைமகன் வரைவொடு வந்துழி, தலைமகள் நுதற்கண் முன்புள்ள பசப்பு நீங்கும் வண்ணம் தோன்றிய கதிர்ப்புக் காட்டி, செவிலிக்குத் தோழி சொல்லியது. 5
106
அன்னை, வாழி!வேண்டு, அன்னை! அவர் நாட்டுத்
துதிக்கால் அன்னம் துணை செத்து மிதிக்கும்
தண் கடல் வளையினும் இலங்கும் இவள்
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே.
அறத்தொடு நின்ற தோழி அது வற்புறுப்பான் வேண்டிச் செவிலிக்குச் சொல்லியது. 6
107
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! என் தோழி
சுடர் நுதல் பசப்பச் சாஅய், படர் மெலிந்து,
தண் கடல் படு திரை கேட்டொறும்,
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே.
தோழி செவிலிக்கு அறத்தொடுநிலை குறித்துக் கூறியது. 7
108
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! கழிய
முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன்
எம் தோள் துறந்தனன்ஆயின்,
எவன்கொல் மற்று அவன் நயந்த தோளே?
அறத்தொடுநிலை பிறந்த பின்னும் வரைவு நீடிற்றாக, 'மற்றொரு குலமகளை வரையும் கொல்?' என்று ஐயுற்ற செவிலி, குறிப்பு அறிந்த தோழி அவட்குச் சொல்லியது. 8
109
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நெய்தல்
நீர்ப் படர் தூம்பின் பூக் கெழு துறைவன்
எம் தோள் துறந்த காலை, எவன்கொல்
பல் நாள் வரும், அவன் அளித்த பொழுதே?
அறத்தொடு நின்ற பின்பு வரைவான் பிரிந்த தலைமகன் கடிதின் வாராதவழி, ஐயுற்ற செவிலி, 'அவன் நும்மைத் துறந்தான்போலும்; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?' என்றாட்குத் தோழி சொல்லியது. 9
110
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! புன்னை
பொன் நிறம் விரியும் பூக் கெழு துறைவனை
'என்னை' என்றும், யாமே; இவ் ஊர்
பிறிது ஒன்றாகக் கூறும்;
ஆங்கும் ஆக்குமோ, வாழிய, பாலே? 5
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10

No comments:
Post a Comment