Pages

Thursday, 15 October 2015

நற்றிணை 67

தங்கின் எவனோ

தொடு


வானத்தில் ஊர்ந்துவந்த கதிரவன் மலையில் மறைந்துவிட்டான்.
கடல்-துறை மக்கள் நடமாட்டம் இல்லாமல் தனித்துக் கிடக்கிறது.
கருநிறக் கால்களை உடைய வெண்குருகு தன் வெண்ணிறச் சிறகுகளை விரித்துப் பறந்து சென்று கருமையான கிளைகளை உடைய புன்னை மரக் கிளையில் தங்கிவிட்டது.

வலிமையான காம்பினை உடைய தாமரை மலர் தன் முகத்தை மூடிக்கொண்டது.
சுறா மீன் உப்பங்கழிக்கே மேய வந்துவிட்டது.

என் தந்தை, அண்ணன் ஆகியோரும் புணைமீது விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டு மீன் வேட்டைக்குப் புறப்பட்டுவிட்டனர்.

அலை முழங்கும் கடலோரத்தில் உள்ள எங்களது படப்பை ஊரில் தங்கினால் என்ன? – தோழி தலைவனிடம் சொல்கிறாள். இரவில் தங்குவற்குத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பது கருத்து.  

இறை கொள் = தங்கு

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
நெய்தல்

சேய் விசும்பு இவர்ந்த செழுங் கதிர் மண்டிலம்
மால் வரை மறைய, துறை புலம்பின்றே;
இறவு அருந்தி எழுந்த கருங் கால் வெண் குருகு
வெண் கோட்டு அருஞ் சிறைத் தாஅய், கரைய
கருங் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே;       5
கணைக் கால் மா மலர் கரப்ப, மல்கு கழித்
துணைச் சுறா வழங்கலும் வழங்கும்; ஆயிடை,
எல் இமிழ் பனிக் கடல், மல்கு சுடர்க் கொளீஇ,
எமரும் வேட்டம் புக்கனர்; அதனால்,
தங்கின் எவனோதெய்ய பொங்கு பிசிர்    10
முழவு இசைப் புணரி எழுதரும்
உடை கடற் படப்பை எம் உறைவின் ஊர்க்கே?

பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி வரைவு கடாயது.
பேரி சாத்தனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

இரவில் மீன் பிடித்தல்

No comments:

Post a Comment