Pages

Friday, 16 October 2015

நற்றிணை 69

ஐது வந்து இசைக்கும்

தொடு


கதிரவன் பகலெல்லாம் பன்னிறக் கதிர்களை வீசிய பின்னர் ஓய்வு கொள்வதற்காக தொலைவிலுள்ள மலைக்குச் சென்று மறைந்துகொண்டிருக்கிறான்.

பறவைகள் தன் குஞ்சுகளை நாடிச் செல்கின்றன.
இரலை-ஆண்மான் தன் பிணை-பெண்மானைத் தழுவிக்கொண்டிருக்கிறது.

முல்லை மொட்டு தன் வாயைத் திறந்துகொண்டிருக்கிறது.
தோன்றி புதரில் பூத்துக்கொண்டிருக்கிறது.

வீடு திரும்பும் பெருமிதப் பசுக்களின் கழுத்து-மணியும், கோவலர் ஊதும் குழலோசையும் சேர்ந்து வந்து மெதுவாக ஒலிக்கின்றன.

இவை பிரிந்தவர் மாட்டு இரக்கம் காட்டாத மாலைப்பொழுது.

இதுபோன்ற காட்சிகளைக் கொண்ட மாலைநேரம் பொருளீட்டிக்கொண்டிருக்கும் அவர் நாட்டிலும் தோன்றினால் அவரால் அங்குத் தங்கியிருக்க முடியாது அல்லவா – என்று தலைவி தோழியிடம் சொல்கிறாள்.

ஆள்வினை = பொருள் தேடும் முயற்சி
ஐது = மெதுவாக
மதர்வை = மதமதப்பு, பெருமிதம்

பாடல் சொல் பிரிப்புப் பதிவு
முல்லை

பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி,
சேய் உயர் பெரு வரைச் சென்று, அவண் மறைய,
பறவை பார்ப்புவயின் அடைய, புறவில்
மா எருத்து இரலை மடப் பிணை தழுவ,
முல்லை முகை வாய் திறப்ப, பல் வயின்  5
தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ,
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி,
கொடுங் கோல் கோவலர் குழலோடு ஒன்றி,
ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை,
ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும்     10
இனையவாகித் தோன்றின்,
வினை வலித்து அமைதல் ஆற்றலர் மன்னே!

வினைவயிற் பிரிதல்ஆற்றாளாய தலைவி சொல்லியது.
சேகம்பூதனார் பாடல்

இது கி.மு. காலத்துப் பாடல்.

தாய்ப்பறவை + குஞ்சு [பார்ப்பு]

No comments:

Post a Comment