Pages

Saturday, 17 October 2015

அகநானூறு 31

மொழிபெயர் தேஎம்


வெயில் தாக்கி உயிரினம் மடியும் கோடைகாலத்தில், தமிழ்வேந்தர் மூவர் காக்கும் மொழிபெயர் தேய மலைகளையும் தாண்டி, வேட்டுவர் வில் எய்து வழிப்பறி செய்து வாழும் காட்டு-வழியில் அவர் சென்றுள்ளார் என்கிறார்கள், அப்படித்தானே – என்று தலைவி தான் கேள்விப்பட்டதைத் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறாள்.
சூரியன் நெருப்பைப் போலச் சிவந்திருக்கிறது. நிலமெல்லாம் காயும்படிச் சுட்டெரிக்கிறது. மரவுயிர்கள் வாடி வதங்கிக்கொண்டிருக்கின்றன. இன்றும் நிலத்தில் மாற்றம் தோன்றப்போவதில்லை என்று உயிரினங்களும் மடியும் காலம் இது. மழையே இல்லாமல் மாறிப்போன காலம் இது.
யா மரத்தில்-கூட இலைகள் இல்லை. அந்த மரத்தின் உச்சிக் கிளைகளில் கழுகுக் கூடு. அதில் குஞ்சுகள்.
வில்லைப் கொண்டு வாழும் மக்கள் வயவர். அவர்கள் எய்த அம்பு பட்டு வீழ்ந்தோர் புண்ணோடு கிடக்கின்றனர். மற்றவர்கள் அரளி-மாலை சாத்திவிட்டுச் செல்கின்றனர். கழுகுகள் புண்பட்டுக் கிடப்போரின் நிணத்தசைகளை பிடுங்கித் தின்றுவிட்டு, அவர்களின் கண்களைக் கொண்டு சென்று குஞ்சுகளுக்கு ஊட்டுகின்றன.
தோழி! அந்த வழியில் இவர் செல்கிறார். வில்லால் துன்புறுத்தி உண்ணும் வாழ்க்கை கொண்டோரை வென்று செல்கிறார், அவர்களின் மலையைத் தாண்டிச் செல்கிறார் என்கின்றனர். வில்லால் வாழ்தல் ‘வல்லாண் வாழ்க்கை’ எனப்படும். இந்த வாழ்க்கை உடையாரை வென்றுகொண்டு செல்கிறார் என்கின்றனர். தமிழ்வேந்தர் மூவர். (சேரர், சோழர், பாண்டியர்). தமிழ் பேசப்படாத தேசம் மொழிபெயர் தேயம். அந்த மொழி தெரியாத நாட்டு மலைகளையும் தாண்டிச் சென்றிருக்கிறார் என்கின்றனர். அதனால் அச்சமாக இருக்கிறது. வரலாறு

பாடல்
சொல் பிரிப்புப் பதிவு
பாலை

அதர் = வழி  
அமையம் = காலம்
உருப்பு = வெயில்
என்பு = என்பால் அன்பு
கணவிரை = அரலி
குறும்பு = பாலைநில ஊர்
ஞொள்கி = வருந்தி
தெறுதல் = காய்தல்
நிணம் = உடல்-கறி
பார்ப்பு = கறவைக் குஞ்சு
மண்டிலம் = சூரியன்

நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலங்கடை மடங்கத் தெறுதலின், ஞொள்கி,
''நிலம் புடைபெயர்வது அன்றுகொல், இன்று?'' என,
மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து,
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து  5
மேற் கவட்டு இருந்த பார்ப்பினங்கட்கு,
கல்லுடைக் குறும்பின் வயவர் வில் இட,
நிண வரிக் குறைந்த நிறத்த அதர்தொறும்,
கணவிர மாலை இடூஉக் கழிந்தன்ன
புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் 10
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி,
''சென்றார்'' அன்பு இலர் தோழி! வென்றியொடு
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத்
தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழி பெயர் தேஎத்த பல் மலை இறந்தே.   15

''பிரிவிடை ஆற்றாளாயினாள்'' என்று பிறர் சொல்லக் கேட்டு, வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
மாமூலனார் பாடல்


கருடன் கழுகு குஞ்சுக்கு ஊட்டல் 

2 comments:

  1. Replies
    1. பாராட்டிய திருமகள் சாந்தியைப் போற்றி மகிழ்கிறேன்

      Delete