Pages

Saturday, 13 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 367

367. மருதம்

கொடியோர் நல்கார் ஆயினும், யாழ நின்
தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர்,
உவக்காண் தோழி! அவ் வந்திசினே
தொய்யல் மா மழை தொடங்கலின், அவர் நாட்டுப்
பூசல் ஆயம் புகன்று இழி அருவி
மண்ணுறு மணியின் தோன்றும்
தண் நறுந் துறுகல் ஓங்கிய மலையே.

அருவி
மண்ணுறு மணியின் 
தோன்றும்

வரைவு உணர்த்திய தோழி தலைமகட்குக் கழிஉவகை மீதூராமை உணர்த்தியது

வரைவு நீட்டித்த இடத்து ஆற்றாளாகிய தலைமகளைத் தோழி ஆற்றும் வகையான் ஆற்றுவித்ததூஉம் ஆம்.

மதுரை மருதன் இளநாகன் பாடல்

அவன் கொடியனாய் உனக்கு இன்பம் தரவில்லை ஆயினும் அந்த நாள் (ஒன்றுகூடும் திருமண நாள்) வந்துவிட்டது. அவன் நாட்டில் ஓங்கி நிற்கும் மலையைப் பார். இடைவிடாமல் மழை பொழிகிறது. பாறை கழுவிய மணி போல் காணப்படுகிறது. அருவி கொட்டுகிறது. உன் ஆயத்துடன் (விளையாட்டுத் தோழிமாருடன்) விரும்பி விளையாடலாம். (அவனும் வருவான். அவன் மணந்துகொள்வதாகச் சொன்ன காலமும் அதுதான்). உன் வளையல் கையில் செறிவுறும்.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment