Pages

Monday, 8 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 353

353. குறிஞ்சி

ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக,
கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே,
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே;
நிரை இதழ் பொருந்தாக் கண்ணோடு, இரவில்,
பஞ்சி வெண் திரி செஞ் சுடர் நல் இல்
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ,
அன்னை முயங்கத் துயில் இன்னாதே.
                                        
பாடு இன் அருவி
ஆடுதல் இனிதே

பகற்குறி வந்தொழுகும் தலைமகன் வெளிப்பாடஞ்சி இரவுக்குறி நயந்தானது குறிப்பறிந்த தோழி, இரவின்கண் அன்னையது காவல் அறிந்து, பின்னும் ''பகற்குறியே நன்று, அவ் இரவுக்குறியின்'', என்று, பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்து

தலைமகன் சிறைப்புறத்தானாக வரைவு கடாயது.

உறையூர் முதுகூற்றன் பாடல்

பகலில் அவன் மார்பைத் தழுவிக்கொண்டு அருவியில் விளையாடுதல் இனிதாயின், இரவில் தாயைத் தழுவிக்கொண்டு தூங்குதல் இன்னாதது (துன்பம் தருவது) ஆகிவிடுமா?   

  • ஆரவாரம் மிக்க மலை அவன் மலை
  • அதன் மலைப்பிளவில் பாடும் அருவி.
  • அவள் தழுவும் அவன் மார்பு அவளுக்குத் தெப்பம்.
  • இரவில் தாய் அணைப்பில் தூங்கும்போது அவள் கண் இதழ்கள் மூடவில்லை.
  • பஞ்சுத் திரி விளக்கு எரிந்து அவள் உறக்கத்திலும் காவல்.
  • அவளது தலைப்பின்னல் அவளுக்குப் பின்னால் கிடந்தது.
  • இனிதுஇன்னா (எதிர்ச்சொல்)
  
கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment