Pages

Thursday, 4 September 2014

காதல் பாடல் குறுந்தொகை # 338

338. குறிஞ்சி

திரிமருப்பு இரலை அண்ணல் நல் ஏறு
அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ,
வீ ததை வியல் அரில் துஞ்சி, பொழுது செல,
செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை,
பின் பனிக் கடைநாள், தண் பனி அற்சிரம்
வந்தன்று, பெருவிறற் தேரே பணைத் தோள்
விளங்கு நகர் அடங்கிய கற்பின்
நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே.

செழும் பயறு

பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.

பெருங்குன்றூர் கிழார் பாடல்

அவள் அடங்கிய கற்பினள். நல்லழகு கிளர்ந்தெழும் அரிவைப் பெண். பருத்த தோளினை உடையவள்.
அவன் பெருவிறல். வெற்றிவீரன். அவன் தேர் வருகிறது. பின்பனி பெய்த கடைசி நாளில் (பங்குனி மாதக் கடைசி நாளில்) வருகிறது. மாலைப் பொழுதில் வருகிறது.
இரலை ஆண்-மான் திரிதிரியாகப் பிரிந்த கொம்புகளை உடையது. அது தன் பெண்மானைத் தழுவிக்கொண்டு நிழலும் வெயிலுமாக இருக்கும் அருநிழலில் தங்கிய பின் மலர்கள் கொட்டிக் கிடக்கும் புதரில் தூங்கிவிட்டு பொழுது சாயும் மாலைப் பொழுதில் விளைந்துகிடக்கும் பயறுகளை கறித்து மேயும். அந்த மாலைப் பொழுதில் அவன் தேர் வருகிறது.

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment