Pages

Saturday, 30 August 2014

காதல் பாடல் குறுந்தொகை # 320

320. நெய்தல்

பெருங் கடற் பரதவர் கோள் மீன் உணங்கலின்
இருங் கழிக் கொண்ட இறவின் வாடலொடு,
நிலவு நிற வெண் மணல் புலவ, பலஉடன்,
எக்கர்தொறும் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள்,
நக்கதோர் பழியும் இலமே போது அவிழ்
பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப்
புன்னைஅம் சேரி இவ் ஊர்
கொன் அலர் தூற்றும், தன் கொடுமையானே.


அலர் அஞ்சி ஆற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத் தோழிக்குக் கூறியது.

தும்பிசேர் கீரன் பாடல்

துறைவனைப் பார்த்து ஒரு நாள் கூடச் சிரிக்கவில்லை. அப்படி இருந்தும் இந்த ஊர் என்னைப் பழி தூற்றுகிறதே.
இந்த ஊரின் தெருக்கள் புன்னை மரங்களை உடையன. பொன் போன்று கொட்டிக் கிடக்கும் அதன் பூக்களில் இருந்துகொண்டு பறவைகள் ஒலிக்கும். (அதுபோல் அல்லவா இந்த ஊர் அலர் தூற்றுகிறது)
பரதவர் கடலிலிருந்து கொண்டுவந்த மீனும், உப்பங்கழியில் பிடித்த இறால் மீனும் வெண்மணலில் காய்ந்து எங்கும் நாறும் துறைவன் அவன். (அதுபோல் அல்லவா இருவர் உறவும் ஊரெல்லாம் நாறுகிறது)

கி.மு. 2ஆம் நூற்றாண்டு

No comments:

Post a Comment