வெண்பா
கணங்கொண்ட வல்வினைகள் கண்கொண்ட நெற்றிப்
பணங்கொண்ட பாந்தட் சடைமேல் - மணங்கொண்ட
தாதகத்த தேன்முரலும் கொன்றையான் தந்தளித்த
போதகத்தின் தாள்பணியப் போம். 9
- கொன்றையான் தந்து அளித்த போதகத்தின் (யானையின்) தாள் பணிய, கணம் கொண்ட வல்வினைகள் போம்.
கட்டளைக் கலித்துறை
போகபந் தத்தந்தம் இன்றிநிற் பீர்புனை தார்முடிமேல்
நாகபந் தத்தந்த நாளம் பிறையிறை யான்பயந்த
மாகபந் தத்தந்த மாமழை போல்மதத் துக்கதப்போர்
ஏகதந் தத்தெந்தை செந்தாள் இணைபணிந் தேத்துமினே. 10
- போக பந்தத்து அந்தம் இலாமல் நிற்பீர்
- தலைமுடி மேல் நாக பந்தம், பிறை கொண்ட இறை பயந்த, ஏக தந்தத்து எந்தை தாள் பணிந்து ஏத்துமினே.
வெண்பா
ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்
மாத்தனிவெண் கோட்டு மதமுகத்துத் - தூத்தழல்போல்
செக்கர்த் திருமேனிச் செம்பொற் கழலங்கை
முக்கட் கடாயானை முன். 11
- அவனுக்கு வெண்கோட்டு மத முகம்
- என் உள்ளம் அவனை ஏத்திக்கொண்டு அவன்முன் நிற்கும்.
கட்டளைக் கலித்துறை
முன்னிளங் காலத்தி லேபற்றி னேன்வெற்றி மீனுயர்த்த
மன்னிளங் காமன்தன் மைத்துன னேமணி நீலகண்டத்
தென்னிளங் காய்களி றேஇமை யோர்சிங்க மேயுமையாள்
தன்னிளங் காதல னேசர ணாவுன் சரணங்களே. 12

No comments:
Post a Comment