Pages

Friday, 31 October 2014

புறநானூறு 65 Purananuru 65

சேரமான் பெருஞ்சேரலாதன் - சோழன் கரிகாற் பெருவளத்தான் - போர்


எங்கும் துயரம். எதிலும் துயரம்.
முழவு முழங்க மறந்தது.
யாழ் பண் மறந்தது.

சமைக்கும் உண்கலம் நெய் மறந்து கவிழ்ந்து கிடந்தது.

சுற்றத்தார் வண்டு மொய்க்கும் தேறல் உண்பதை மறந்தனர்.
உழவர் பாட மறந்தனர்.

ஊர்த் தெரு விழாக்கொண்டாட்டம் மறந்தது.

நிறைமதி நாளில் ஒரு சுடர் (ஞாயிறு) மறைய 
ஒரு சுடர் (திங்கள்) தோன்றுவது போல, 
சேரன், சோழன் ஆகிய இருவரில் ஒருவன் வெளிப்பட 
மற்றொருவன் மறைந்தான். 

தன்னை ஒத்த அரசன் (கரிகாலன்) 
தன் வலிமையால் தாக்கிய வேல் 
தன் முதுகிலும் காயப்படுத்தியதை எண்ணி 
நாணம் கொண்ட அரசன் (பெருஞ்சேரலாதன்) 
போர்க்களத்திலேயே உயிர் துறக்கும் உண்ணா நோன்புடன் 
தன் வாளைத் தன்முன் நிறுத்தி 
வடக்கு நோக்கி அமர்ந்திருக்கிறான்.

இனி, பகல் காலம் பண்டு போல் மகிழ்வாகச் செல்லாது.

பாடல்

மண் முழா மறப்ப, பண் யாழ் மறப்ப,
இருங் கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப,
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப,
உழவர் ஓதை மறப்ப, விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப,       5
உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து,
இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு,
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன்           10
வாள் வடக்கிருந்தனன்; ஈங்கு,
நாள் போல் கழியல, ஞாயிற்றுப் பகலே.

திணை பொதுவியல்; 
துறை கையறு நிலை.
சேரமான் பெருஞ்சேரலாதன் 
சோழன் கரிகாற் பெருவளத்தானோடு 
பொருது, 
புறப் புண் நாணி, 
வடக்கிருந்தானைக் 
கழாத்தலையார் பாடியது.

காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2 ஆம் நூற்றாண்டு

வலப்புறம் பெருஞ்சேரலாதன் வடக்கிருத்தல்
இடப்புறம் கோப்பெருஞ்சோழன் வடக்கிருத்தல்



No comments:

Post a Comment