சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
புறாவின் உயிரைக் காப்பாற்றத்
தன்னையே
யானைத் தந்தத் தராசுக்கோல் தட்டில் நிறுத்துக்
கழுகுக்குக் கொடுத்த உன் முன்னோன்
சிபியின் வழிவந்தவன்
நீ ஆகையால்
ஈதல் உன் புகழ் அன்று.
நீ
தூங்கெயில் எறிந்த தொடித்தோள்
செம்பியன் வழிவந்தவன் ஆதலால்
பகைவரை அழித்தல் உன் புகழ் அன்று.
உறையூர் அரசவையில் தொன்றுதொட்டு
அறநெறி நிலைத்திருப்பதால்
மக்களுக்கு முறை வழங்குதல் உன் புகழ் அன்று.
வளவ!
நீ ஏழு போர்களில் வெற்றி கண்டவன்.
கோட்டைக்
கதவின் குறுக்குத் தாழ்ப்பாள் மரம் (எழு) போன்ற
தோளை உடையவன்.
ஆத்தி மாலை சூடியவன்.
குதிரை வீரன்.
இமயத்தில் வில் பொறித்த வானவன் தொலைய
அவன் வஞ்சி
நகரத்தை வாடச்செய்த உன் பொருமையைப் பாடும்போது
உன்னை எப்படிப் பாடுவேன்!
பாடல்
புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக்
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல் நின் புகழும் அன்றே; சார்தல்
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந் திறல் 5
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின்,
அடுதல் நின் புகழும் அன்றே; கெடு இன்று,
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால்
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு 10
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்,
கண் ஆர் கண்ணி, கலி மான், வளவ!
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய
வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு
இமயம் சூட்டிய ஏம விற்பொறி, 15
மாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய,
வாடா வஞ்சி வாட்டும் நின்
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே?
- திணை பாடாண் திணை;
- துறை இயன்மொழி.
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை
- மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.
2 ஆம் நூற்றாண்டு
![]() |
| இது பாபிலோனியா தொங்கும் தோட்டம் தமிழகத்தில் இருந்த இது போன்ற தொங்கும் தோட்டத்தை இந்த வளவனின் முன்னோன் தூங்கெயில் எறிந்த தொடிதோள் செம்பியன் போரின்போது அழித்தான் |

No comments:
Post a Comment