சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
அரசன் கிள்ளிவளவன்
கருவூரை முற்றுகை இட்டிருந்தான்.
கருவூர் அரசன் தன் கோட்டைக் கதவுகளை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருந்தான்.
எதிர்க்காதவன்
ஊரை முற்றுகை இட்டுக்கொண்டே இருத்தல்
நாணத்தக்க செயல் என்று கூறுகிறார் புலவர்.
போரிட்டு அழித்தாலும்,
போரைக் கைவிட்டுத்
திரும்பினாலும்
நீ உன் உயர்ந்த நிலையை எண்ணிப்பார்.
மகளிர் கழங்கைத் தெற்றி விளையாடும்
ஆன்பொருநை
ஆற்றுமணல் சிதைய,
தன் காவல்மரக் காடுகள்
கோடாரியால் வெட்டப்படும் ஓசையைக் கேட்டுக்கொண்டு
கோட்டைக்குள் இருக்கும் அரசனை
முரசு முழங்கும் படையுடன் எதிர்க்கிறாய் என்பது
நாணத்தக்க
செயலாகும்.
பாடல்
அடுநை ஆயினும், விடுநை ஆயினும்,
நீ அளந்து அறிதி, நின் புரைமை வார் கோல்,
செறி அரிச் சிலம்பின், குறுந் தொடி
மகளிர்
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய, 5
கருங் கைக் கொல்லன் அரம் செய் அவ் வாய்
நெடுங் கை நவியம் பாய்தலின், நிலை அழிந்து,
வீ கமழ் நெடுஞ் சினை புலம்ப, காவுதொறும்
கடி மரம் தடியும் ஓசை தன் ஊர்
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப, 10
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு, ஈங்கு, நின்
சிலைத் தார் முரசம் கறங்க,
மலைத்தனை என்பது நாணுத் தகவு உடைத்தே.
- திணை வஞ்சி;
- துறை துணைவஞ்சி.
- சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் முற்றியிருந்தானை
- ஆலத்தூர் கிழார் பாடியது.
காலம் : கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.
2 ஆம் நூற்றாண்டு
![]() |
| இக்காலத்தில் விளையாடப்படும் அக்காலத் தெற்றி விளையாட்டு * ஆன்பொருநை ஆற்று மணலில் அன்று பொன்னால் செய்த கழங்கினைச் சுண்டித் தெற்றி ஆடினர். |

No comments:
Post a Comment